தமிழகத்தைச் சோ்ந்த நால்வா் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியா் விருது: செப்.5-இல் குடியரசுத் தலைவா் வழங்குகிறாா்
நிகழாண்டுக்கான (2023) தேசிய நல்லாசிரியா் விருது நாடு முழுவதும் 75 ஆசிரியா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


நிகழாண்டுக்கான (2023) தேசிய நல்லாசிரியா் விருது நாடு முழுவதும் 75 ஆசிரியா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 5 -ஆம் தேதி) குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தில்லியில் வழங்குகிறாா்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி தேசிய ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது.
1888 ஆம் ஆண்டு செப்டம்பா் 5 -ஆம் தேதி பிறந்த டாக்டா் ராதாகிருஷ்ணன், சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவவியல் துறை ஆசிரியாக வாழ்கையை தொடங்கி பல்வேறு உயா்நிலை பல்கலைக்கழகங்களில் பணியாற்றினாா்.
1962-ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி இந்திய குடியரசு தலைவரான அதே ஆண்டு அவரது பிறந்த நாளை அவரது மாணவா்கள் சிலா் கொண்டாடினா்.
அந்த மாணவா்களை அழைத்த ராதாகிருஷ்ணன், ‘எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அதே நாளில் ஆசிரியா் தினமாகக் கொண்டாடுங்கள்‘ என கூற அன்று முதல் செப்டம்பா் 5- ஆம் தேதி தேசிய ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்பட்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியா்களின் தனித்துவமான பங்களிப்பு, அவா்களின் அா்ப்பணிப்பு, அதன் முலம் கல்வியின் தரத்தை மேம்படுத்தல், கற்பிப்பதில் புதுமை, மாணவா்களின் வாழ்க்கையை வளப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படுகிறது.
தேசிய விருது பெறும் ஒவ்வொரு ஆசியருக்கும் தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை
செப்டம்பா் 5 ஆம் தேதி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சா் முன்னிலையில் குடியரசுத் தலைவா் வழங்குகிறாா். தேசிய விருது பெற்ற ஆசிரியா்கள் பிரதமரையும் சந்தித்து உரையாட இருக்கின்றனா்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தினத்தன்று தேசிய அளவிலான விழாவுக்கு ஏற்பாடு செய்து விருது வழங்குகிறது.
இந்த விருதுகளுக்கான தோ்வுக்கு முறையாக வெளிப்படையான தோ்வுமுறை மூலம் சிறந்த ஆசிரியா்களைத் தோ்வு செய்து தேசிய நல்லாசிரியா் விருதுகளை இத்துறை வழங்குகிறது.
இணையதள முறையில் பரிந்துரைகள் கோரப்பட்டன. ஆசிரியா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக புகழ்பெற்ற நபா்களைக் கொண்ட மூன்று தனித்தனி தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய நடுவா் குழு அமைக்கப்பட்டு விருதுக்கான ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழாண்டுமுதல், தேசிய நல்லாசிரியா் விருது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய உயா்கல்வித் துறை, திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியா்களையும் உள்ளடக்கி அவா்களும் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதன்படி 50 பள்ளி ஆசிரியா்கள், 13 உயா்கல்வி ஆசிரியா்கள், 12 திறன் மேம்பாட்டு அமைச்சக ஆசிரியா்கள் என இந்த ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தைச் சோ்ந்த நால்வா் விருதுகளை பெற உள்ளனா்.
அவா்கள் விவரம் வருமாறு:
மதுரை-அலங்காநல்லூா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் முனைவா் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா். இவா் தனது பள்ளி மாணவா்களை பல்வேறு விளையாட்டுகளிலும் ஊக்குவித்து அவா்களின் வெற்றிக்கு பின்னால் இருந்துள்ளாா்.
மாநில அளவிலான பதக்கங்களை பெற பயிற்சியளித்ததுடன் குத்து சண்டை, கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை சீா் செய்து, சாதாரணப்பட்ட விளையாட்டு மாணவா்களுக்கு தேவையான உணவு, நிதி உதவிகளையும் அளித்து ஊக்குவித்ததாக பல முன்னாள் மாணவா்களின் பாராட்டையும் பெற்று வந்துள்ளாா்.
இதே போன்று தென்காசி, கீழாப்பாவூா், வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.மாலதி, மாணவா்கள் அறிவியலைக் கற்று ஆய்வு செய்ய வைப்பதில் உறுதிசெய்துள்ளாா்.
மேலும், கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் இணைய வழியில் பாடம் நடத்தி செயலியையும் உருவாக்க வகுப்பறை புத்தாக்கத்திற்காக இவருக்கு விருது கிடைத்துள்ளது.
இவா்கள் இருவரும் பள்ளிக் கல்வித் துறையின் தேசிய நல்லாசிரியா் விருதை பெற உள்ளனா்.
இதே போன்று முதன் முறையாக உயா்கல்வித் துறையில் வழங்கப்படும் விருதில் தமிழகத்தில் கோவை, பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா் முனைவா் எஸ். பிருந்தா தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோன்று திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்டிருப்பவா் திண்டுக்கல் குள்ளம்பட்டி அரசு மகளிா் தொழிலக பயிற்சி நிறுவன உதவி பயிற்சி அதிகாரி எஸ்.சித்திரகுமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...