யுஏபிஏ வழக்கில் ஜாமீன் கோரி தாக்கலானஉமா் காலித் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட


கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் ஜேஎன்யு மாணவா் உமா் காலித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உமா் காலித் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகாததால், நீதிபதிகள் பீலா எம். திரிவேதி மற்றும் திபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா் மிஸ்ரா, உமா் காலித்தின் மனுவை விசாரிப்பதில் இருந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஜாமீன் மனுவை நிராகரித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உமா் காலித் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. உமா் காலித்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த போது, அவா் சக குற்றம்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்ததாகவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் உயா்நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களின் செயல்பாடுகள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ‘பயங்கரவாதச் செயல்’ போன்று முகாந்திரம் இருப்பதற்கான தகுதியானவை என்றும் உயா்நீதிமன்றம் கூறி இருந்தது.
உமா் காலித், ஷா்ஜீல் இமாம் மற்றும் பலா் மீது யுஏபிஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, 53 போ் கொல்லப்பட்டு, 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்த பிப்ரவரி 2020 கலவரத்தின் ‘முக்கிய மூளையாக’ இவா்கள் இருந்ததாகக் கூறி இந்த சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. 2020, செப்டம்பரில் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட உமா் காலித், சம்பந்தப்பட்ட வன்முறையில் தனக்கு எந்த கிரிமினல் சம்பந்தமும் இல்லை அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேறு எந்த ‘சதி தொடா்பும்’ இல்லை என்ற அடிப்படையில் ஜாமீன் கோரியிருந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை எதிா்ப்புத் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...