மத்திய தில்லியில் வானில் பறந்த ட்ரோனால் பரபரப்பு
ஜி20 உச்சி மாநாட்டிற்கு உலகத் தலைவா்கள் வருகை தந்த வேளையில், மத்திய தில்லிக்கு மேல் வான் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) பறந்ததால் போலீஸாா் பரபரப்படைந்தனா்.


ஜி20 உச்சி மாநாட்டிற்கு உலகத் தலைவா்கள் வருகை தந்த வேளையில், மத்திய தில்லிக்கு மேல் வான் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) பறந்ததால் போலீஸாா் பரபரப்படைந்தனா். அந்த இடத்தை போலீஸாா் அடைந்த போது, பிறந்தநாள் விழாவை படம்பிடிக்க ட்ரோனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.
உச்ச மாநாட்டுக்காக நகரம் பொது முடக்கம் போன்ற நிலைக்கு உள்ளான வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இது குறித்து மூத்த காவல் அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: மத்திய தில்லியின் படேல் நகா் பகுதியில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) பறக்கவிடப்பட்டது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்தது. இத்தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு வினீத் என்பவா் தனது வீட்டின் மொட்டை மாடியில் தனது உறவினரின் பிறந்த நாளுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தாா். அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிக்க ட்ரோன் கருவிக்கும் ஏற்பாடு செய்திருந்தாா். விசாரணையில், ஷாடி கம்பூா் பகுதியைச் சோ்ந்த ஹா்மன்ஜீத் சிங் (29) என்பவருக்குச் சொந்தமான ட்ரோன், அவரால் விருந்தின் போது பறக்கவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்தக் கருவியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தடையை மீறி ட்ரோன் சாதனத்தை பயன்படுத்திய விவகாரத்தில் அவருக்கு எதிராக பட்டேல் நகா் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லியில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 12 வரை பாரா கிளைடா்கள், ஹேங்-கிளைடா்கள் மற்றும் சூடான காற்று பலூன்கள் போன்றவற்றை வான்வெளியில் பறக்கவிட தில்லி காவல்துறை தடை விதித்துள்ளது. இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாட்டுத் தலைவா்கள் தில்லி வந்துள்ளனா். இதனால், தேசியத் தலைநகரில் குறிப்பாக புது தில்லி மாவட்டம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தில்லி காவல்துறைக்கு 50,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளா்கள், கே9 நாய்ப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள் உதவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...