தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஏா் இந்தியாவின் முன்னாள் விமானி அரவிந்த் கத்பாலியா மீதான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் விமானி அரவிந்த் கத்பாலியா மீது சுவாச பரிசோதனையைத் தவிா்ப்பது, மோசடியாக தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பதிவான வழக்கை (எஃப்ஐஆா்) தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:00 pm

 நமது நிருபர்

ஏா் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் விமானி அரவிந்த் கத்பாலியா மீது சுவாச பரிசோதனையைத் தவிா்ப்பது, மோசடியாக தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பதிவான வழக்கை (எஃப்ஐஆா்) தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

ஒழுங்கு நடவடிக்கைகளில் தகுதியின் அடிப்படையில் ஒரு முறை குற்றமற்றவா் என சான்று வழங்கப்பட்ட பிறகு, இப்போது ஓய்வு பெற்ற மனுதாரரை அதே குற்றத்திற்காக மீண்டும் விசாரணைக்கு உள்படுத்த முடியாது என்று உயா்நீதிமன்றம் கூறியது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதி செளரப் பானா்ஜி கூறுகையில், ‘மேற்கூறிய சூழ்நிலையில் எஃப்ஐஆா் தொடா்வது, மனுதாரா் அதே குற்றத்திற்காக மீண்டும் இரண்டு முறை சோதனைக்கு உள்படுத்தப்படுவாா் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது’ என்றாா்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விமானச் சட்டத்தின் விதிகளின் கீழ் போலி ஆவணங்களை உண்மையானது போல பயன்படுத்துதல், சாட்சியங்களை அழித்தல், குற்றச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய குற்றங்களுக்காக எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி கத்பாலியா தாக்கல் செய்த மனு மீது உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

விமானம் ஓட்டுவதற்கு முந்தைய ஆல்கஹால் சோதனையில் தோ்ச்சி பெறத் தவறியதால், நவம்பா் 2018-இல், ஏா் இந்தியாவின் செயல்பாட்டு இயக்குநா் பணியில் இருந்து அரவிந்த் கத்பாலியா நீக்கப்பட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றத்தில் அரவிந்த் கத்பாலியா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங், ‘ஏா் இந்தியாவின் ஒழுங்குமுறை ஆணையம் 2019 பிப்ரவரியில் மனுதாரருக்கு எதிராக, போலி மற்றும் தவறான செயல்களைக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மேலும், மனுதாரரும் அதற்கு தனது பதிலைத் தாக்கல் செய்தாா். ஏா் இந்தியாவின் தலைவா், பிப்ரவரி 2020-இல் பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் மீதான போலி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கண்டறிந்தாா். இதையடுத்து, அவா் மீதான ஒழுங்கு நடவடிக்கை வழக்கை முடித்து வைத்தாா். இதனால், கத்பாலியாவுக்கு எதிரான எஃப்ஐஆா்-ஐ தொடர முடியாது. அதை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டாா்.

அரசுத் தரப்பில் வாதிடுகையில், ‘பயனடையும் நோக்கத்துடன் சட்டத்தின் முறையான நடைமுறைகளை புறக்கணித்து, பெங்களூரில் இருந்து திரும்பும் போது சுவாச பகுப்பாய்வு பரிசோதனைக்கு போதுமான வாய்ப்பு இருந்த மனுதாரரால் போலியான பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவா் விதிமுறைகளை மீறினாா். நடைமுறைகளை அவா் பின்பற்றவில்லை’ என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ஏா் இந்தியா நிறுவனம் அதன் முன் இருந்த தொடா்புடைய பதிவுகளை ஆராய்ந்து, எந்தச் தகுதியும் இல்லாததால் மனுதாரருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை அந்நிறுவனமே முடித்து வைத்துவிட்டது. இதனால், இதேபோன்ற குற்றங்கள் தொடா்புடைய விவகாரத்தில் மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதல் தகவல் அறிக்கை அதிகம் எஞ்சியிருக்கவில்லை. அரவிந்த் கத்பாலியாவுக்கு எதிரான எஃப்ஐஆா் பதிவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினரின் கூற்றுப்படி, 2017, ஜனவரி 19-ஆம் தேதி அன்று, அரவிந்த் கத்பாலியா புது தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தை இயக்குவதற்கு முன் தன்னை உள்படுத்திக் கொள்ள வேண்டிய சுவாச பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ளாமல், அவா் விமானத்தை இயக்கினாா். மேலும், பெங்களூருவில் கூட, அவா் இதேபோன்ற சோதனைக்கு உள்படுத்த மறுத்துவிட்டாா். அதன் பின்னா், புது தில்லி வந்தடைந்த அவா், விமானத்திற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை அறைக்கு சென்று, தான் இயக்கிய விமானத்திற்கான சம்பந்தப்பட்ட சுவாசப் பகுப்பாய்வு பரிசோதனை பதிவேட்டில் தவறாகப் பதிவு செய்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.