தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெத்துவேட்டுதான்: அமைச்சர் துரைமுருகன்

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெத்துவேட்டுதான், அதிமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என துரைமுருகன் கூறியிருப்பது...

News image

வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

டிஎன்எஸ்

Updated On :25 மார்ச் 2026, 7:26 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி வெத்துவேட்டுதான், அதிமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் இப்படியெல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேலூர் வடக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார். மேலும் ஆரிமுத்து மோட்டூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் உள்பட சுமார் 100 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியின் மேடையில் பேசிய வேலூர் வடக்கு மண்டல திமுக பொருளாளர் நரசிம்மன் மற்றும் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பேசுகையில், காட்பாடி தொகுதியில் மீண்டும் அமைச்சர் துரைமுருகன் தான் போட்டியிட உள்ளார். அவரே மீண்டும் வெற்றி பெறுவார், கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அதிக முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் துரைமுருகன், அவரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என பேசினர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இங்கே பேசிய பொருளாளர் நரசிம்மன் மற்றும் வேலூர் எம்எல்ஏ ஆகிய இருவர் காட்பாடி தொகுதியில் நான் போட்டியிடுவதாக பெருமை பேசினார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கட்சியில் பொறுப்பில் இருக்கிற நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். யாருடைய பெயரை தலைவர் அறிவிக்கிறாரோ அதற்குப் பிறகுதான் அவர் தகுதியுடைய வேட்பாளர் ஆவார். அதற்கு முன்னால் நாமே ஏதோ ஒரு பெயரை சொல்லி இவர் தான் வேட்பாளர், இவர் தான் வருவார் என பேசுவது உங்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் "அதை கேட்டுக் கொண்டிருக்க கூடிய எனக்கு அசௌகரியமாக தான் இருக்கிறது. "நானே ஒத்துக் கொள்ள மாட்டேன் வேறு யார் பேசினாலும் சரி நீங்கள் பேசினாலும் சரி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை நான் ஒரு எம்எல்ஏ அவ்வளவு தான்.

யார் இந்த தொகுதியில் இருப்பார்கள் என்பதை தலைவர் முடிவு செய்வார்கள். யாரை அவர் முடிவு செய்தாலும் அதையேற்று பணியாற்றுவதற்கு தான் ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் இங்கே இருக்கிறார்கள். "அந்த செயல் வீரர்களோடு நானும் கலந்து கொள்வேன் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்."

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரம் ஒவ்வொரு தலைமையும் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தலைவரும் இரவு 12 மணி வரை தேர்தலை கவனித்துக் கொண்டிருக்கிறார். நமது தலைவர் ஒவ்வொரு கட்சியாக அழைத்து சாதுரியமாக பேசி அனுப்பி வைப்பதை நான் கண்டு வியக்கிறேன். அரசியலில் அவர் காட்டுகிற நிதானமும், தொண்டர் இடத்தில் காட்டுகின்ற அக்கறையும் இயக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

"அகில இந்திய கட்சிகள் யாராக இருந்தாலும் சொல்கிறேன் அவர்களால் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியவில்லை. ஆனால் கமுக்கமாகவே இருந்து முடிவெடுத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்து வெற்றிகரமாக செய்திருப்பவர் தலைவர் தான்." இந்த முயற்சியை நிச்சயம் வெற்றி தரும் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதை உறுதியாக சொல்லி விட்டு செல்கிறேன். எனவே 30 ஆம் தேதிக்கு பிறகு அரசியலில் மற்றதை எல்லாம் பேசலாம். அதுவரை நானும் பேசக்கூடாது. இந்த தேர்தல் அலுவலகத்தை திறந்து வைப்பதற்கு பெருமைப்படுகிறேன் நண்பர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று துரைமுருகன் கூறினார்.

அதிமுகவில் தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்துவேட்டு

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை என்றார்.

உதயநிதிக்கு இடையூறா

கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் உதயநிதிக்கு இடையூறு ஏற்படும் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, எனக்கு அதற்கெல்லாம் பதில் தெரியாது என்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம் பெறுமா என கேட்டதற்கு, நான் தேர்தல் அறிக்கை குழுவில் இல்லை. அதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதிகள் வரும் என கூறினார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியால் ஏற்கனவே திமுக அதிக கடன் வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் கடன் அதிகரிக்குமா என கேட்டதற்கு, அவங்க ஆட்சிக்கு வரப்போவதில்லை அதனால் இப்படியெல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். "அதிமுகவில் தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான்" என விமர்சித்தார்.

திருமாவளவனுக்கு வருத்தம் கிடையாது

விசிகவுக்கு தொகுதி பங்கியீட்டில் இழுப்பறி நீடித்தது மற்றும் தேமுதிகவிற்கு உடனடியாக தொகுதி பங்கீடு முடிந்தது குறித்தும் கேட்டதற்கு, திருமாவளவனுக்கு வருத்தம் கிடையாது. மகிழ்ச்சியாக தான் சென்றார் என துரைமுருகன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.