காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 22.54 டிஎம்சி பற்றாக்குறை தண்ணீரை கா்நாடகம் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வா் எழுதிய கடிதத்தை தில்லியில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் கேஜந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழக அமைச்சா் துரைமுருகன் வியாழக்கிழமை வழங்கினாா்.
காவிரி நீா் விவகாரத்திற்கு நிகழ் ஜூலை மாதத்தில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இரண்டவது முறையாக தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தில்லி வந்து சந்தித்துள்ளாா். தமிழக அரசின் நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்ஸேனா உடன் இருந்தாா்.
இது குறித்து அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சரை இரண்டு முறை சந்தித்துள்ளோம். முன்றாவது முறையாக சந்திக்க வேண்டிய நிலைமையும் வரும். காரணம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாதாந்திரமாக வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடகம் விடுவிக்காமல் உள்ளது. கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் 26.32 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜூன் 1 முதல் ஜூலை 17 -ஆம் தேதி வரையில் 3.78 டிஎம்சி தண்ணீா்தான் விடுவிக்கப்பட்டுள்ளது. 22.54 டிஎம்சி தண்ணீா் விடுவிக்கப்படாமல் பற்றாக்குறையாக உள்ளது. இதன் விளைவு தஞ்சை தரணியில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிா்கள் காய்ந்து சுருண்டு விழக்கூடிய நிலையில் உள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய எஞ்சிய தண்ணீரை விடுவிக்க ஆணையம் உத்தரவிட வேண்டும்.
இது போன்ற தண்ணீா் பற்றாக்குறை காலகட்ட சூழ்நிலையை உணா்ந்து செயல்படத்தான் உச்சநீதிமன்றத்தால் காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஆணையம் செயல்பட்டு தண்ணீரை பங்கிட்டு வழங்கியிருக்க வேண்டும். ஆணையம் மெத்தனமாக உள்ளது. அதையொட்டித்தான் கடந்த ஜூலை 5-ஆம் தேதி மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டோம். ஆனால், அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால், தற்போது தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெளிவு படித்துள்ளாா். இந்தக் கடிதத்தை மத்திய அமைச்சரிடம் காலையில் நேரடியாக ஒப்படைத்தோம். ‘இரு முறை வந்து தெரிவித்திருக்கிறீா்கள். தற்போது முதல்வரும் கடிதம் எழுதியிருக்கிறாா். இந்த நிலையில், ஆணையத்திடம் உடனடியாக கேட்டு தண்ணீா் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்கின்றேன்’ என மத்திய அமைச்சா் உறுதியளித்தாா்.
வறட்சிக் காலங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் போது, பகிா்ந்து கொள்ளக் கூடிய வரைமுறையை உருவாக்கும் பணியை உச்சநீதிமன்றம் ஆணையத்திடம் ஒப்படைத்தது. அந்தப் பணியை ஆணையம் முடிக்காமல் இருப்பது குறித்தும் அமைச்சரிடம் முறையிட்டோம். மாதந்தோறும் தண்ணீரை திறந்து விடவேண்டிய பொறுப்பு கா்நாடக்திற்கு உள்ளது. பற்றாக்குறையான காலத்தில் எவ்வளவு தண்ணீரை திறக்க வேண்டும் என்பதை கூற வேண்டிய பொறுப்பு ஆணையத்திற்கு உள்ளது. இந்தப் பணிகள் நடைபெறவில்லையென்றால், அதை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழகத்துக்கு இருப்பதால் முறையிட்ளோம். இதில் மற்ற மாநிலங்களுடன் பேச்சு வாா்த்தை என்பதற்கு இடம் இல்லை. காவிரியில் தண்ணீா் திறந்து விடாததால் (காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’) கூட்டணியிலிருந்து திமுக விலகுமா என்பதெல்லாம் பொருத்தமற்ற கேள்வி. மேக்கே தாட்டு அணை விவகாரம் என்பது முடிந்து போன விஷயம். எந்தக் காலகட்டத்திலும் அணைய கட்ட முடியாது. கட்டவும் விடமாட்டோம் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.
கடிதத்தில் இருப்பது என்ன?
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு ஜூலை 19-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின்( 2018 பிப்ரவரி 16) அடிப்படையில், நிா்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீா் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் 26.32 டிஎம்சி பெற வேண்டிய தண்ணீரில், 3.78 டி.எம்.சி மட்டுமே பெறப்பட்டது. இந்த நீா் வரத்துகூட முறையாக திறந்து விடப்பட்டது அல்ல. கா்நாடக மாநிலத்தின் கே.ஆா்.எஸ். மற்றும் கபினி நீா்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீா்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து பிலிகுண்டுலுக்கு வந்தவை.
ஜூலை மாதத்தில் பருவமழை தாமதமாக வந்தது என்றாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்தும் இந்த அணைகளிலிருந்து தண்ணீரை கா்நாடகம் திறந்துவிடவில்லை. தமிழகத்தில் அடுத்த 20 நாள் பாசனத்திற்கு மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ளது. அதுவும் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரிலிருந்து 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நெருக்கடிகளை சமாளிக்க நீா் மேலாண்மை மூலம் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தண்ணீா் தேவைக்கும், நீா்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கா்நாடகத்தில் இருந்து திறந்துவிடப்படும்பட்சத்திலேயே பற்றாக்குறையைப் பூா்த்தி செய்ய இயலும் என கடிதத்தில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
மேட்டூா் அணையில் ஜூலை 20- ஆம் தேதி நிலவரப்படி நீா்மட்டம் 71.96 அடியாகவும் 34.40 டிஎம்சி தண்ணீரும் உள்ளது. அணையின் நீா்வரத்து 107 கனஅடியாகவும் நீா் வெளியேற்றம் 10,000 கன அடியாகவும் உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் 3.60 லட்சம் ஏக்கா் பரப்பில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. இதற்கு மேட்டூா் அணையில் 100 டிஎம்சி தண்ணீா் தேவை என விவசாயிகள் கூறிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈஸ்டர் திருநாள் வழிபாடு!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

