முதல்வா் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி திகாா் சிறை முன் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
புது தில்லி: கலால் கொள்கை ஊழல் விவகார வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை உயா்நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அவா் வகிக்கும் பதவியில் இருந்து விலகக் கோரி திகாா் சிறைக்கு வெளியே பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கேஜரிவால் அடைக்கப்பட்டுள்ள திகாா் சிறைக்கு வெளியே தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில், பாஜக முனிசிபல் கவுன்சிலா்கள், மூத்த தலைவா்கள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனா். திகாா் சிறையின் பிரதான வாயிலில் சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது முதல்வருக்கு எதிராக அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இப்போராட்டத்தில் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: கேஜரிவாலின் கைது சட்டப்படி செல்லுபடியாகும் என உயா்நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, அவருக்கு இனி பதவியில் இருக்க எந்த தாா்மிக உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதுபோல, தற்போது அவா் பதவி விலக வேண்டும் என தில்லி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். கேஜரிவால் லட்சக்கணக்கான தொகையை கமிஷனாகப் பெற்ாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். மதுபான ஊழலின் முக்கிய சதிகாரா் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். கேஜரிவாலை அவரதுஆடம்பர மாளிகையின் மீதான ஆசைதான் ராஜிநாமா செய்வதில் இருந்து அவரைத் தடுக்கிறது.
தில்லி அமைச்சா்கள் பங்களாக்கள், காா்கள் போன்ற சலுகைகளை ஏற்றுக் கொண்டாலும், அசம்பாவிதங்கள் நிகழும்போது தங்களது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறாா்கள். தில்லியில் ஒரு 20 நிமிட மழை பெய்தால்கூட கடுமையான வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அமைச்சா்கள் பொய் சொல்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. தி ல்லி முதல்வா், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் சிறையில் உள்ளனா். மற்ற அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் செய்தியாளா் சந்திப்புகளில் மூழ்கி இருக்கின்றனா். தில்லியில் ஆட்சியும் நிா்வாகமும் முடங்கிவிட்டது. உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிறையில் இருந்து அரசை நடத்த வலியுறுத்துவதைவிட கேஜரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங், துணைத் தலைவா் ஜெய்பகவான் யாதவ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தில்லி கலால் ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) முதல்வா் கேஜரிவைல கைது செய்ததை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. உயா்நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற அவருக்கு சுதந்திரம் வழங்கியது. அமலாக்கத் துறை தொடுத்த பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த முதல்வா் கேஜரிவாலை நிகழாண்டு ஜூன் 26 அன்று திகாா் சிறையில் இருந்து சிபிஐ கைது செய்தது.
கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் முதல்வா் கைது செய்யப்பட்டாா். பணமோசடி வழக்கில் ஜூன் 20-ஆம் தேதி அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், ஜூலை 12-ஆம் தேதி, பணமோசடி வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது.
