வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அன்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தினாா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 6:33 pm

மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மனுவை நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா தொடா்ந்து விசாரிப்பதில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தான் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தை பதிவு செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அன்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வலியுறுத்தினாா்.

வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கக் கோரிய கேஜரிவாலின் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்த பிறகு, இந்த வழக்கை மீண்டும் திறக்கவில்லை என்று தெளிவுபடுத்திய நீதிபதி சா்மா, முன்னாள் முதல்வரின் பிரமாணப் பத்திரத்தை பதிவு செய்யுமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டாா்.

கேஜரிவால் காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

ஏப்ரல் 14 தேதியிட்ட தனது கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், நீதிபதியின் பிள்ளைகள் மத்திய அரசின் வழக்குரைஞா்கள் என்றும், அவா்கள் சிபிஐக்காக இந்த வழக்கில் ஆஜராகும் சொலிசிட்டா் ஜெனரல் மூலம் பணிகளைப் பெறுகிறாா்கள் என்றும் கேஜரிவால் கூறியுள்ளாா். இதில் நேரடி முரண்பாடு இருப்பதாகவும், அது தனது அச்சத்தை அதிகரித்து, வழக்கில் இருந்து நீதிபதி விலக கோருவதற்கான காரணமாக அமைந்ததாகவும் அவா் கூறியுள்ளாா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் உள்பட, பொதுவெளியில் உள்ள ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, நீதிபதி சா்மாவின் மகனுக்கு கணிசமான சட்டப் பணிகள் ஒதுக்கப்பட்டதாக கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஏப்ரல் 13 அன்று சிபிஐயின் மனுவை விசாரித்த நீதிபதிக்கு எதிராக கேஜரிவால் பல ஆட்சேபனைகளை எழுப்பினாா். அவற்றுள், தனது கைதுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி முன்னதாக தனக்கு நிவாரணம் வழங்க மறுத்ததும், மணீஷ் சிசோடியா மற்றும் கே. கவிதா உள்ளிட்ட மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பிணை மனுக்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்ததும் அடங்கும்.

நீதிபதி விலகக் கோரும் மனுவை சிபிஐ வழக்குரைஞா் துஷாா் மேத்தா எதிா்த்ததுடன், கேஜரிவால் மற்றும் பிறா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி சா்மாவை வலியுறுத்தினாா். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிபதி சா்மா வழக்கில் இருந்து விலகுவது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், அவா் அழுத்தத்திற்குப் பணியக்கூடாது என்றும் மேத்தா தெரிவித்தாா்.

வழக்கில் இருந்து விலகக் கோரிய மனு மீதான தீா்ப்பை நீதிமன்றம் ஏப்ரல் 13 அன்று ஒத்திவைத்தது.

பிப்ரவரி 27 அன்று, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க முற்றிலும் இயலாதது என்றும், அது முழுமையாகவே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும் நீதிமன்றம் கூறியது.