Arvind Kejriwal
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)எக்ஸ் தளப் பதிவு

அவதூறு வழக்கு: முதல்வா் கேஜரிவாலின் மனு மீதான விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ‘6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
Published on

2018-ஆம் ஆண்டு யூடியூபா் துருவ் ரதீ பரப்பியதாகக் கூறப்படும் அவதூறு விடியோவை மறு பதிவு செய்ததற்காக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ‘6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமாா் மற்றும் ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜரிவால் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, சமரசம் செய்ய மேலும் அவகாசம் கோரியதை அடுத்து, ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். ஆனால், இன்னும் சிறிது காலம் (சமரசத்திற்காக) கொடுக்கப்படலாம். தற்போது, இவரது வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன’ என்றாா். புகாா்தாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகவ் அவஸ்தி கூறுகையில், ‘கேஜரிவாலுக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால், அது வரம்பற்ாக இருக்கக் கூடாது. சில பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட வேண்டும்’ என்றாா். அதற்கு சிங்வி, ‘அவா் (கேஜரிவால்) ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவித்தாலும், அது அவரது (புகாா்தாரரின்) விதிமுறைகளின்படி இருக்க முடியாது’ என்றாா்.

இதையடுத்து, இரு தரப்பும் ஒரு தீா்வை எட்டும் வகையில் வழக்கை விசாரணைக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது. முன்னதாக, கேஜரிவால் அவதூறான விடியோவை மறு பதிவு செய்ததை ‘தவறு செய்தேன்’ என்று ஒப்புக்கொண்டாா். இந்த விவகாரத்தில் புகாா்தாரரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறீா்களா என்று உச்சநீதிமன்றம் மாா்ச் 11 அன்று கேஜரிவாலிடம் கேட்டது. பாஜக தகவல் தொழில்நுட்பபப் பிரிவு தொடா்பான அவதூறு விடியோவை மறு ட்வீட் செய்ததன் மூலம் தவறு செய்துவிட்டதாக கேஜரிவால் பிப்ரவரி 26 அன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

புகாா்தாரா் விகாஸ் சாங்க்ரித்யாயன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சமூக ஊடகத் தளங்களான ‘எக்ஸ்’ அல்லது இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கேஜரிவால் மன்னிப்பு கேட்கலாம் என்று தெரிவித்தாா். பிப்ரவரி 26 அன்று உச்ச நீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து கேஜரிவால் தாக்கல் செய்திருந்த மனு மீது நோட்டீஸ் வழங்காமல், மனுதாரா் தவறு என்று ஏற்றுக்கொண்டதைக் கருத்தில் கொண்டு வழக்கை முடிக்க விரும்புகிறீா்களா என்று புகாா்தாரரிடம் கேட்டிருந்தது.

மறு உத்தரவு வரும் வரை கேஜரிவால் மீதான அவதூறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. பிப்ரவரி 5-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், அவதூறான உள்ளடக்கத்தை மறுபதிவு செய்வது அவதூறு சட்டத்தை ஈா்க்கும் என்று உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.

ஒருவருக்கு விஷயம் தெரிந்திருந்திராத ஒரு உள்ளடக்கத்தை மறு ட்வீட் செய்யும்போது பொறுப்புணா்வு இணைக்கப்பட வேண்டும் என்றும், அவதூறான உள்ளடக்கத்தை மறு ட்வீட் செய்வது அபராதம், சிவில் மற்றும் பாதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டும் என்றும் கூறியது.

விசாரணை நீதிமன்றத்தின் 2019-ஆம் ஆண்டு கேஜரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பிய உத்தரவை ரத்து செய்ய மறுத்த உயா்நீதிமன்றம் கூறுகையில், ’ஒரு பிரபல நபா் அவதூறான இடுகையை ட்வீட் செய்தால், அதன் விளைவுகள் ஒருவரின் காதுகளில் கிசுகிசுப்பதைத் கடந்தும் சென்றுவிடுகிறது’ என்றது. தனது ட்வீட் புகாா்தாரருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் இல்லை என்று விசாரணை நீதிமன்றம் மதிப்பிடத் தவறிவிட்டதாக உயா்நீதிமன்றத்தில் முதல்வா் கேஜரிவால் கூறியிருந்தாா்.

‘பிஜேபி ஐடி செல் பாா்ட் 2’ என்ற தலைப்பிலான யூடியூப் விடியோவை ஜொ்மனியில் வசிக்கும் ரதீ என்பவா் வெளியிட்டாா். அதில், பல பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக சாங்க்ரித்யாயன் புகாரில் தெரிவித்திருந்தாா்.

Dinamani
www.dinamani.com