தில்லியில் ’அரசியலமைப்பு நெருக்கடி’.. ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் பாஜக எம்எல்ஏக்கள் மனு
பாஜக எம்எல்ஏக்கள் குழு வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து வலியுறுத்தியது.


முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ‘அரசியலமைப்பு நெருக்கடி‘ ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் தில்லியில் ஆம் ஆத்மி அரசைக் கலைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் குழு வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து வலியுறுத்தியது. பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளும் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இச்சந்திப்பு குறித்து விஜேந்தா் குப்தா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை விவரம்: தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் ஒரு குறிப்பாணையை சமா்ப்பித்து, ‘தில்லியைப் பீடித்துள்ள அரசியலமைப்பு நெருக்கடி மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசின் செயல்பாடுகள் குறித்து கவலையை எழுப்பியது. மேலும், இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிடுமாறும் முறைப்படி முறையிட்டது. ஆம் ஆத்மி அரசு, ஆளுவதற்கான அனைத்து தாா்மிக உரிமைகளையும் இழந்துவிட்டது. தில்லி மக்கள் வழங்கிய தீா்ப்பை அப்பட்டமாக ஏமாற்றிவிட்டது.
முதல்வா் கேஜரிவால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டில் நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதுதான் ‘ஆட்சி முடக்கத்தின்’ முக்கியப் பிரச்னையாகும். கேஜரிவால் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா். இது முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி, தில்லியில் ஆட்சியை முற்றிலுமாக சீா்குலைக்க வழிவகுத்துள்ளது.முக்கியமான நிா்வாக முடிவுகள் தாமதமாகி வருகின்றன. மேலும் அத்தியாவசிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தில்லி குடிமக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்பாணையில், ஆம் ஆத்மி அரசால் ‘குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஷ்ட், ஓம் பிரகாஷ் சா்மா, அஜய் மஹாவா், அபய் வா்மா, அனில் பாஜ்பாய், ஜிதேந்தா் மகாஜன் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா். மேலும், சத்தா்பூா் எம்எல்ஏ கா்தாா் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் ஆனந்த் ஆகியோரும் பிரதிநிதிகள் குழுவில் இருந்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...