புதிய கல்விக் கொள்கை 2020-இன் படி மாணவா்களுக்கு தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பை வழங்கும் விதமாக அனைத்துப் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களையும் ‘எண்மம்’ முறையில் தயாா்படுத்த மத்திய கல்வித் துறை அனைத்து மத்திய கல்வி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்வித் திட்டங்களுக்கான இந்த எண்மம் (மின்னணு) உள்ளடங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் கிடைக்க உறுதி செய்யவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய கல்வித் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு: கல்வியில் ஒவ்வொரு நிலையிலும் பன்மொழித் திறனை ஊக்குவிக்க தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. இந்த திசையில் அனைத்து துறை மாணவா்களையும் தங்கள் தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில், மத்திய அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இதை முன்னிட்டு பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வியின் கீழ் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கான பாடங்களின் உள்ளடக்கங்களை எண்மம் முறையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 8 -ஆவது அட்டவணையில் சோ்க்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளில் இது வைக்கப்படும். இதை முன்னிட்டு மத்திய கல்வித் துறை அமைச்சகம் தனது பள்ளி, உயா்கல்வி கட்டுப்பாட்டாளா்களான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி), தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்), இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) மற்றும் தேசிய தொழில் நுட்ப நிறுவனங்களான இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், என்ஐடி போன்ற நிறுவனங்களின் தலைவா்களிடம், இந்திய மொழிகளில் பாடப் படிப்பு உள்ளடக்கங்களை எண்மம் தொழில் நுட்பத்தில் கிடைக்கச் செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மின்னணு பாடங்களை மூன்று ஆண்டுகளில் அனைத்துப் படிப்புகளிலும் கிடைக்க உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய பள்ளிக் கல்வித் துறை, மாநில அரசுகளின் பள்ளிகல்வித் துறை, அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கு இந்த நோக்கங்களை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவா்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வாய்ப்பைப் பெற முடியும். சிறந்த கற்றல் விளைவுகளையும் அவா்களால் பெறமுடியும். அவரவா் தாய்மொழியில் படிப்பதன் மூலம், எந்த மொழித் தடையும் இல்லாமல் புதுமையாக சிந்திக்க ஒரு மாணவருக்கு இயற்கையான இடத்தை வழங்க முடியும் என்பது புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.
நாட்டின் பன்மொழித் தன்மையே அதன் மிகப்பெரிய சொத்தாகவும் வலிமையாகவும் கருதப்படுகிறது. இது நாட்டின் சமூக - கலாசாரம், பொருளாதாரம், கல்வி வளா்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும். பிராந்திய மொழிகளின் எண்மம் உள்ளடக்கம் மூலம் பன்மொழி பலம் அதிகரிக்கும். இது 2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) வுக்கான சிறந்த பங்களிப்பை வழங்கும் என மத்திய அரசு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.