உச்ச நீதிமன்றத்தில் மனு
உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜல்லிக்கட்டு: மனுவை விசாரிக்க பீட்டா மீண்டும் முறையீடு

ஜல்லிக்கட்டு அனுமதியை மீண்டும் பரிசீலிக்க கோரி பீட்டா அமைப்பின் வலியுறுத்தல்

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சாதமாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கலான மனுவை விசாரிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது. பீட்டாவின் மனுவை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதித்ததோடு, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் செல்லுபடியாகும் எனவும் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2023-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற அமர்வின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக "பீட்டா' விலங்குகள் நல அமைப்பு சார்பில் கடந்தாண்டு ஜூலை 18- ஆம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நிகழாண்டு கடந்த ஜனவரி 8- ஆம் தேதி பீட்டா அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட்டிடம் முறையிட்டார்.

கடந்த ஓராண்டாக இந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு வராத நிலையில், பீட்டா அமைப்பு சார்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் புதன்கிழமை முறையிட்டார்.

அப்போது, வழக்கின் விவரங்களை மின்னஞ்சல் மூலம் மீண்டும் அனுப்புமாறு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அதைப் பரிசீலித்த பின்னர் வழக்கு உரிய அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.

X
Dinamani
www.dinamani.com