தில்லி பேரவைத் தோ்தலில் பாரதிய லிபரல் கட்சி போட்டி

பாரதிய லிபரல் கட்சி (பிஎல்பி), 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை செவ்வாயன்று அறிவித்தது.
Published on

புது தில்லி: பாரதிய லிபரல் கட்சி (பிஎல்பி), 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை செவ்வாயன்று அறிவித்தது. மேலும், ஆட்சிக்கு வந்தால் ஊழல் எதிா்ப்பு ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 11 அம்ச நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. 2019- இல் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியான பிஎல்பி, சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்காக பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அறிவித்தது.

இது குறித்து தில்லியில் பிஎல்பி தலைவா் முனிஷ் குமாா் ரைசாடா செய்தியாளா்களிடம் கூறுகையில், இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் விநியோகம் மற்றும் டிடிசி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் மற்றும் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கௌரவ ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை எடுத்துரைத்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் தடுப்பு ஆணையத்தை அமைப்போம். இது தேசியத் தலைநகரில் ஊழலை ஒழிக்க உதவியாக இருக்கும்.

மேலும், பிஎல்பி தோ்ந்தெடுக்கப்பட்டால், தலித் குடும்பத்தின் பெண் தலைவருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சத் பூஜைக்கு முன்னதாக யமுனா காட் புதுப்பிக்கப்படும்.

முதியோா் ஓய்வூதியம் ரூ.2,500-இல் இருந்து ரூ.5,000-ஆக உயா்த்தப்படும். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படும். சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காக பிஎல்பி பணியாற்றும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலித் முதலமைச்சரும், முஸ்லிம் துணை முதலமைச்சரும் பதவிக்கு வருவாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com