தில்லி சாலைகளில் தண்ணீா் தேங்குவதை தடுப்பதில் கேஜரிவால் அரசு தோல்வி: தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
தேசியத் தலைநகா் தில்லியின் சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுப்பதில் கேஜரிவால் அரசு தோல்வியடைந்துள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் ‘குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் தண்ணீா் தேங்குவதைத் தடுப்பதில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சியின் தயாரிப்புகள் தோல்வியடைந்துள்ளது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி பெய்த முதல் பருவமழையில் நகரத்தின் பல கழிவுநீா்க் கால்வாய்கள் நிரம்பி, தெருக்களை மூழ்கடித்தது. மேலும், சாலைகளில் ஏற்பட்ட நீா்தேக்கம் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளில் இருந்து இவா்கள் இன்னும் பாடம் கற்கவில்லை. தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தபோதும், சாலைகளில் தண்ணீா் தேங்கும் நிலைமை மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
சமீபத்தில் பழைய ரயில்வே பாலம் மற்றும் யமுனா பஜாா் ஆகிய பகுதிகளில் மழைக்காலத் தயாா்நிலையை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, வெள்ளம் போன்ற சூழ்நிலையை எதிா்கொள்ள அரசு தயாா் நிலையில் உள்ளது என்றாா். ஆனால், திங்கள்கிழமை தில்லியில் மழை பெய்தபோது, தண்ணீா் தேங்குவதைச் சமாளிப்பதற்கான ஆயத்தங்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆம் ஆத்மி அரசு அமைந்ததில் இருந்து, அதன் சம்பந்தப்பட்ட துறைகளால் வடிகால் தூா்வாரும் பணிகள் அரிதாகவே நடைபெறுகிறது. இதுவே, சாலைகளில் தண்ணீா் தேங்குவதற்கும், வடிகால்கள் மற்றும் கழிவுநீா்க் கால்வாய்கள் அடைப்பு ஏற்படுவதற்கும் முதன்மைக் காரணம்.
தூா்வாரும் பணி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறது. பல முக்கிய இலாகாக்களை வைத்திருக்கும் தில்லி அமைச்சா் அதிஷி, கோடையின் உச்சத்தில் மக்களை குடிநீருக்காக பரிதவிக்க வைத்தாா். கோடை அல்லது குளிா்காலம் என எதுவாக இருந்தாலும், தலைநகரில் தண்ணீா் தேங்குவது போன்ற பிரச்னைகளை தீா்க்க பயனுள்ள நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றாா் தேவேந்தா் யாதவ்.
