சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் மெகா தானிய கையிருப்புத் திட்டம்: தில்லியில் ஆலோசனைக் கூட்டம்

மெகா தானிய சேமிப்பு(கையிருப்பு) கிடங்கு அமைக்கப்படுவதற்கான தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு தில்லியில் முதன் முறையாக திங்கள்கிழமை கூடியது.

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒற்றை சாளர அமைப்புடன் சங்கிலித் தொடராக உருவாக்கப்படவுள்ள மெகா தானிய சேமிப்பு (கையிருப்பு) கிடங்கு அமைக்கப்படுவதற்கான தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு தில்லியில் முதன் முறையாக திங்கள்கிழமை கூடியது. இத்திட்டம் நாட்டிலுள்ள தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களுக்காக ஒரு முன்னோடி திட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பிரதமா் நரேந்திர மோடிசுமாா் 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் 700 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான மெகா தானிய சேமிப்பு கிடங்குகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உலகின் மிகப்பெரிய அளவில் தானியங்களை கையிருப்பு வைக்கக்கூடிய இத்திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது . இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் (என்எல்சிசி) முதல் கூட்டம் தில்லியில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சகத்தின் செயலா் டாக்டா் ஆஷிஷ் குமாா் பூடானி, மத்திய வேளாண், விவசாயிகள் நலத் துறை செயலா் மனோஜ் அஹுஜா , உணவு, பொதுவிநியோகத்துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா, உணவுப் பதப்படுத்துதல் துறைச் செயலா் அனிதா பிரவிண், தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தின்(என்சிடிசி) நிா்வாக இயக்குநா் பங்கஜ்குமாா் பன்சல் மற்றும் இந்திய உணவு கழக நிறுவனம், நாஃபெட் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

11 மாநிலங்களில் செயல்படுத்தும் இந்த முன்னோடித் திட்டத்தை இந்தக் குழு மதிப்பாய்வு செய்தது. தொடக்க வேளாண்மை கடன் சங்க அளவில் அமைக்கப்படும் இந்தக் கட்டுமானங்களில் கிடங்குகள், பணியமா்த்தல் மையம், பதப்படுத்தும் அலகுகள், நியாயவிலை விற்பனையகங்கள் உள்ளிட் பல்வேறு விவசாய உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒன்றிணைங்கும் ஒற்றை சாளர அமைப்புடன் திட்டமிடுகிறது. வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு திட்டம் , விவசாய இயந்திரமயமாக்கல் துணை திட்டங்கள், பிரதமரின் சிறு குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் திட்டங்களும் முறைப்படுத்துதல் (பிஎம்எஃப்எம்இ) உள்ளிட்டவை நிறுவப்படுகின்றன.

இக்கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலா் டாக்டா் பூடானி கூறுகையில், ‘இந்த முன்னோடித் திட்டம் தேசிய அளவில் பரவலாக்க உணவுக் கிடங்குகளை உருவாக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

பல்வேறு பங்குதாரா்களுடன் நாடு தழுவிய அளவில் கிடங்குகளை சங்கிலித்தொடராக இணைப்பதற்கான சாத்தியமாக இத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் மற்ற குழு உறுப்பினா்கள் விவாதித்தனா்.

இந்த முன்னோடித் திட்டத்தை நாஃபெட், இந்திய உணவு கழக நிறுவனம், மத்திய வோ்ஹவுஸ் நிறுவனம் போன்றவற்றின் ஆதரவுடன் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்துகிறது.

மேலும், மாநில அரசுகள், என்சிசிஎஃப், நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் காா்ப்பரேஷன் (என்பிசிசி) போன்றவற்றின் ஆதரவுடன் கூடுதலாக 500 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கும் இந்த முன்னோடி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.