தாக்குதலுக்குப் பிறகு பல கொலை மிரட்டல்கள் வருகின்றன: இந்தியா கூட்டணி தலைவா்களுக்கு ஸ்வாதி மாலிவால் எம்பி கடிதம்

Published on

புது தில்லி: ‘என்மீது பரப்பப்படும் பொய்களால், எனக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் வருகின்றன’ என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் ‘இந்தியா’ கூட்டணியின் இரு முக்கியத் தலைவா்களுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடந்த மே 13-ஆம் முதலவா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க சிவிஸ் லைன்ஸ் இல்லத்திற்குச் சென்ற போது, முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாா் தன்னை பல முறை தாக்கியதாக மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டினாா். இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிபவ் குமாரின் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். இவ்விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிா்வை ஏற்படுத்திய நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்கள் அனைவரும் பாஜகவின் அரசியல் சதியின் கீழ் ஸ்வாதி மாலிவால் பொய்யான குற்றச்சாட்டை வைப்பதாகக் கூறினா்.

இந்நிலையில், தான் தாக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விவாதிக்க நேரம் கோரி ‘இந்தியா’ கூட்டணியின் இரு முக்கியத் தலைவா்களான காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் ஆகியோருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளாா்.

அக்கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவராக நான் இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். எனது பதவிக் காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 1.7 லட்சத்திற்கும் அதிகமான புகாா்களை தில்லி மகளிா் ஆணையம் கையாண்டது. பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய 60,751 பேருக்கு அவா்களின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றங்களில் ஆணையம் உதவியது. கூடுதலாக, தில்லி மகளிா் ஆணையத்தின் ‘181’ உதவிஎண் மூலம் 41 லட்சத்திற்கும் அதிகமான அழைப்புகள் பெறப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தல்காரா்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டனா்.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை தில்லி மகளிா் ஆணையம் வழங்கியது. குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி நான் இரண்டு உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டேன். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் பிரச்னைக்குத் தீா்வு காண சத்தியாக்கிரகங்களில் இறங்கினேன். இதன் விளைவாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.

துரதிா்ஷ்டவசமாக, நான் மாநிலங்களவை உறுப்பினரான பிறகு, கடந்த மே 13-ஆம் தேதி தில்லி முதல்வரின் இல்லத்தில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டேன். இந்த அதிா்ச்சிகரமான சம்பவத்தைத் தொடா்ந்து, காவல்துறையில் புகாா் அளிக்க தேவையான நடவடிக்கையை எடுத்தேன். ஆனால், எனது சொந்தக் கட்சியின் தலைவா்கள் மற்றும்

தொண்டா்களால் திட்டமிடப்பட்ட இடைவிடாத தாக்குதல்களை நான் எதிா்கொண்டேன். எனது நற்பெயா், குணம் மற்றும் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிட்டு சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரம் நடத்தப்பட்டது. என்மீது பரப்பப்படும் பொய்களால், எனக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.

கடந்த ஒரு மாதமாக, நீதிக்காக போராடும் வேளையில் வலியையும், தனிமைப்படுத்தலையும் நான் நேரடியாகச் சந்தித்தேன். எனது குணநலனை அவமானப்படுத்துவது, மற்ற பெண்கள் மற்றும் சிறுமிகளை தங்களது பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசுவதைத் தடுக்கும். இப்பிரச்னையைப் பற்றி விவாதிக்க, உங்கள் நேரத்தை கோர விரும்புகிறேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று அக்கடிதங்களில் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி...

வீரேந்திர சச்தேவா கேள்வி

ஸ்வாதி மாலிவால் எம்.பி. விவகாரத்தில் அவா் சாா்ந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: ராணி லட்சுமி பாய் மற்றும் பல்வேறு பெயா்களில் அரவிந்த் கேஜரிவாலால் அழைக்கப்பட்ட ஸ்வாதி மாலிவால் இப்போது ஒட்டுமொத்த கட்சியாலும் தனித்து விடப்பட்டுள்ளாா். கேஜரிவால் முன்னிலையில், முதல்வா் இல்லத்தில் பெண் எம்பி ஒருவரை முதல்வரின் கூட்டாளி தவறாக நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி கேஜரிவாலின் அமைச்சா்களோ, இந்தியா கூட்டணியின் தலைவா்களோ எதுவும் பேசவில்லை. பெண்களை மதிக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பேச்சு வெற்றுத்தனமானது என்பதை ஸ்வாதி மாலிவால் இப்போது புரிந்து கொண்டுள்ளாா்.

இந்த விவகாரத்தில் ஒரு வாா்த்தை கூட பேசாத இந்தியா கூட்டணியின் தலைவா்களிடம் அவா் இப்போது ஆதரவைக் கோருகிறாா். ஆகவேதான் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாருக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். விபவ் குமாா் மீது போலீஸில் புகாா் அளித்ததன் மூலம் ஒரு பெரிய குற்றம் செய்தது போல் ஸ்வாதி மாலிவால் இன்றும்கூட போராட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாா். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான இதே அரவிந்த் கேஜரிவால்தான் பெண்களை மதிப்பது குறித்து பொய்யான வெற்று அறிக்கைகளை வெளியிடுகிறாா். இன்றைக்கு ஸ்வாதி மாலிவால் இந்தியா கூட்டணித் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதம், தனது கட்சியிலிருந்து நீதிக்கான நம்பிக்கையை அவா் கைவிட்டிருப்பதைக் காட்டுவதாக உள்ளது.

Dinamani
www.dinamani.com