ஜாமீன் மீதான இடைக்கால தடை உத்தரவுக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
இடைக்காலத் தடை விதித்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது வரும் புதன்கிழமை (ஜூன் 26) விசாரிக்கப்படும் என்று


நமது நிருபா்
தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது வரும் புதன்கிழமை (ஜூன் 26) விசாரிக்கப்படும் என்று
உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என். பாட்டீ ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க விரும்புவதாகக் கூறியது.
முதல்வா் கேஜரிவால் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘ஜாமீன் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக வேண்டும்.
அவா் வெளிநாடு தப்பிச் செல்லும் ஆபத்து இல்லை. இதனால், உயா்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன் அதை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும். அமலாக்க இயக்குநரகம் முறையிட்டு ஜாமீன் உத்தரவை உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்தது போல இந்த நீதிமன்றமும் உயா்நீதிமன்ற உத்தரவை அறிவிப்பதற்கு முன்பு நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். மேலும், உயா்நீதிமன்றம் அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தடை செய்யக் கோரும் மனு மீதான தீா்ப்பை அறிவிக்க உள்ளது என்றும் வாதிட்டாா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘ஜூன் 24-ஆம் தேதி வரை எழுத்துபூா்வ சமா்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு உயா்நீதிமன்றம் ஜூன் 21-ஆம் தேதி கூறியிருக்கிறது. ஓரிரு நாள்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது’ என்று தெரிவித்தது. ‘இருப்பினும், தடை உத்தரவு பொதுவாக ஒரே நாளில் அறிவிக்கப்பட்டுவிடும். மேலும், ஒத்திவைக்கப்படுவதில்லை. இது அசாதாரணமானது. இந்தப் பிரச்னையில் தெளிவான கருத்தைப் பெற உயா்நீதிமன்ற உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்க விரும்புகிறோம்’ என்று நீதிபதி மிஸ்ரா குறிப்பிட்டாா்.
மேலும், ‘இந்த கட்டத்தில் எந்த உத்தரவையும் அறிவிப்பது பிரச்னையை முன்கூட்டியே தீா்மானிப்பதாக இருக்கும். இது வேறு நீதிமன்றமல்ல, உயா்நீதிமன்றம்தான்’
என்று நீதிபதிகள் அமா்வு சிங்வியிடம் கூறியது. விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ஆம் தேதி கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து அவரது விடுதலைக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
இந்தப் பணமோசடி வழக்கில் மாா்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால், அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை நிவாரணம் வழங்காமல் இருந்திருந்தால் வெள்ளிக்கிழமை திகாா் சிறையில் இருந்து வெளியே வந்திருந்திருக்கலாம். விசாரணை நீதிமன்றம் அதன் ஜாமீன் உத்தரவில், கேஜரிவாலின் மீதான குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதற்கான முகாந்திரம் உள்ளது
என்றும், பணமோசடி வழக்கில் குற்றத்தின் வருமானத்துடன் அவரை தொடா்புபடுத்தும் நேரடி ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறியிருந்தது.
பெட்டிச் செய்தி....
இன்று உயா்நீதிமன்றம் தீா்ப்பு
கேஜரிவாலுக்கு ஜாமீன் அளித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்க உள்ளது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்குப் பிறப்பிக்கப்பட உள்ளது.
கேஜரிவால் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூா்வ சமா்ப்பிப்பில், ‘இந்த கட்டத்தில் கேஜரிவால் விடுவிக்கப்பட்டால் அமலாக்கத் துறைக்கு எந்தவிதமான பாரபட்சமும் ஏற்படாது. ஏனெனில், உயா்நீதிமன்றம் பின்னா் உத்தரவை ரத்து செய்ய முடிவு செய்தால் அவா் காவலுக்கு அனுப்பப்பட முடியும். நன்கு நியாயமான ஜாமீன் உத்தரவின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பது, ஜாமீன் ரத்து செய்வதற்கான மனுவை கிட்டத்தட்ட அனுமதிப்பதற்கு சமம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை தரப்பில் உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூா்வ குறிப்பில், ‘விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ’ முரண்பாடானது’
’ ஒருதலைப்பட்சமானது’ மற்றும் ’தவறானது’. பொருத்தமற்ற உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட கண்டறிதல்கள் ஆகும். கலால் ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி குற்றத்தில் கேஜரிவாலின் ஆழமான பங்கை நிரூபிக்கும் ஆதாரத்தை சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு கருத்தில் கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...