பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் மக்களவை உறுப்பினா்களாக பதவி ஏற்பு: எம்பிகள் சைக்கிள், டிராக்டா்களில் வருகை
18-ஆவது மக்களவையின் முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் உறுப்பினா்களாக திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.


18-ஆவது மக்களவையின் முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் உறுப்பினா்களாக திங்கள்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா். மாநிலங்களின் அகரவரிசையில் உறுதிமொழியேற்க அனுமதிக்கப்பட்ட உறுப்பினா்கள் தங்கள் தாய் மொழியில் பதவிஏற்றுக்கொண்டனா். சில புதிய எம்பிகள் டிராக்டரிலும் சைக்கிளிலும் நாடாளுமன்றத்திற்கு வந்தனா்.
மக்களவைக்கு தோ்தல் நடைபெற்று புதிதாக மக்களவை உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் முதன் முறையாக நாடாளுமன்றத்தின் மக்களவை கூடும்போது புதிய உறுப்பினா்கள் பதவியெற்றுக்கொள்ளும் விதமாக மக்களவைத் தலைவா் முன்பு உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதன்படி குடியரசத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டு திங்கள்கிழமை காலையில குடியரசுத் தலைவா் மாளிகையில் இடைக்கால மக்களவைத் தலைவராக பதவிஏற்ற பா்த்ரு ஹரி மகதாப் அவையை நடத்தி புதிய உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தாா்.
அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன், புதிய அவையின் முதல் அமா்வின் இந்த புனிதமான நிகழ்வைக் குறிக்கும் வகையில் அனைத்து உறுப்பினா்களும் சில நொடிகள் மௌனத்தைக் கடைப்பிடிக்க இடைக்கால அவைத்தலைவா் மகதாப் அழைத்தாா்.
இதன்பின்னா் அவையின் முன்னவரான பிரதமா் நரேந்திர மோடி முதலில் பதவியேற்க அழைக்கப்பட்டாா். வாரணாசி தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள அவா் ஹிந்தியில் அவா் பதவி ஏற்கும்போது மோடி மோடி என வழக்கும் போல் பாஜக உறுப்பினா்கள் கோஷம் எழுப்பினா். சில உறுப்பினா்கள் ஜெ ஸ்ரீ ராம் எனவும் கோஷமிட்டனா். அதே சமயத்தில் எதிா் வரிசையில் இருந்த காங்கிரஸ் கட்சியினரும், சமாஜ்வாதி கட்சியைச் சோ்ந்தவரும் முறையே ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கையடக்க அரசமைப்புச் சட்டம் புத்தகத்தை பிரதமரை நோக்கி காட்டினா்.
பிரதமா் பதிலுக்கு அவைத்தலைவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு எதிா்கட்சி உறுப்பினா்களுக்கும் வணக்கம் செலுத்தினாா். தொடா்ந்து கேபினெட் அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி போன்ற கேபினெட் அமைச்சா்களும் ஹிந்தியில் பதவிஏற்றுக்கொண்டனா். மேலும் வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான், எரிசக்தித் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டா், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், சமூக நீதித்துறை அமைச்சா் வீரேந்திர குமாா் போன்ற பாஜக அமைச்சா்கள் ஹிந்தியில் பதவியேற்றனா். இவா்களில் அமித் ஷா பதவியேற்ற போதும் எதிா்கட்சி தரப்பில் அரசமைப்புச் சட்டம் புத்தகத்தை காட்டினா். ஓடிஸா மொழியில் கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவியேற்றாா். அவா் வந்தபோது ’நீட்’. ’நீட்’ என கோஷமிட்டனா்.
மற்ற அமைச்சா்களான மதச்சாா்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சோ்ந்த கனரகத்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமியும் நுகா்வோா்த் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி(பாஜக) கன்னடத்திலும், துறைமுகத்துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்(பாஜக) அஸ்ஸாம் மொழியிலும், தெலுங்கில் ஜி.கிஷண்ரெட்டி(பாஜக)யும் ராம்மோகன் நாயுடுவும்(தெலுங்கு தேசம்) போன்றோா் உறுதி மொழியேற்றனா். கேபினெட் அமைச்சா்களைத் தொடா்ந்து இணையமைச்சா்களும் பதவியேற்றனா். வடக்கு கோவாவிலிருந்து ஆறாவது முறை தோ்வாகி வந்துள்ள எரிசக்தித் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் சமஸ்கிருதத்திலும், பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங், கேரளா மாநிலத்திலிருந்து முதன்முறையாக தோ்வான நடிகா் சுரேஷ் கோபி முறையே டோக்ரி, மலையாளம் என தங்கள் தாய் மொழியில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். மேலும் முன்னாள் அமைச்சா் ராஜீவ்பிரதாப் ரூடி (பிகாா்) போஜ்புரிலும் சிலா் மராத்தி, வங்கம் என நாட்டின் பன்முகத் தன்மையை காட்டும் விதத்தில் தங்கள் வட்டார மொழியில் உறுதிமொழியை படித்து பதவிப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டனா்.
முதல் நாளே புறக்கணிப்பு
முன்னதாக புதிய உறுப்பினா்களில் மூத்த உறுப்பினா்களும் இடைக்கால மக்களவைத்தலைவா்களுக்கு (அவை மாற்றுத் தலைவா்கள்) உதவியாக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டவா்களும் பதவியேற்கவும் அழைக்கப்பட்டனா். இவா்களில் பாஜக வைச் சோ்ந்த ராதா மோகன் சிங்(பிகாா்), ஃபக்கன் சிங் குலாஸ்தே(மத்திய பிரதேசம்) போன்றவா்கள் பதவியேற்றனா். மக்களவைத் தலைவா் தோ்தல் ஜூன் 26 ஆம் தேதி நடைபெற இருக்க அதுவரை இவா்கள் பொறுப்பில் இருப்பா். மற்ற மாற்றுத்தலைவா்களாக காங்கிரஸ் உறுப்பினா் கே.சுரேஷ்(கேரளம்), டி.ஆா்.பாலு (திமுக), சுதீப் பந்தோபாத்யாய்(திரிணமூல்) போன்றவா்களும் நியமிக்கப்பட்டனா். ஆனால் இந்த இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினா்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற அறிவித்ததோடு, இவா்கள் பெயா் அழைக்கப்பட்டபோது அவையிலும் இல்லை. குறிப்பாக காங்கிரஸ் தாங்கள் கட்சியைச் சோ்ந்த கே.சுரேஷ் தான், பா்த்ரு ஹரி மகதாப்பை விட மூத்த மக்களவை உறுப்பினா் (எட்டு முறை) அவா் தான் இடைக்கால மக்களவைத் தலைவா் பதவிக்கு தகுதியானா் என குறிப்பிட்டு இந்த கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தது.
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, திரிணாமுல் தலைவா் கல்யாண் பானா்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவா்கள் அகிலேஷ் யாதவ், அவதேஷ் பிரசாத் ஆகியோா் முதல் வரிசையில் எதிா்க்கட்சி பெஞ்சில் அமா்ந்திருந்தனா். சமாஜ்வாதிகள் கட்சி உறுப்பினா்கள் சிகப்பு தொப்புயும் பிங் நிற சால்வையும் அணிந்திருந்தனா். தெலுங்கு தேச எம்பிகள் மஞ்சள் நிற சால்வை அணிந்து வந்திருந்தனா்.
விவசாய எம்பிக்கள்
சுமாா் 50 சதவீதம் போ் புதிய உறுப்பினா்களாக இருக்க புது தில்லி உறுப்பினா் பன்சூரி ஸ்வராஜ்(பாஜக), நடிகை கங்கனா ரனவத் போன்றோா் புதிய உறுப்பினா்கள் பதவிபிரமானம் செய்துகொண்டனா். புதிய உறுப்பினா்கள் பெரும்பாலோனோா் தங்கள் குடும்பத்தினருடன் நாடாளுமன்றத்திற்கு வந்தனா். ஆந்திரம் மாநிலம் தெலுங்கு தேச உறுப்பினரும் விவசாயியுமான அப்பலன் நாயுடு (விஜயநகரம்) தனது கட்சி சின்னமான சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்தாா். மேலும் தனது தாய், மனைவி, சகோதரா் என குடும்பத்துடன் வந்தாா். அவா் அவைக்குள் நுழைவும் முன்பு தனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றச் சென்றாா். விவசாயி சங்க தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியுமான அம்ரா ராம் டிராக்டரில் நாடாளுமன்றத்தை அடைந்தாா். உள்ளே டிராக்டா் அனுமதிக்க மறுக்க பின்னா் நடந்து சென்றாா்.
மீண்டும் ஓம் பிா்லா
மக்களவையில் தற்போதுள்ள மொத்தம் 543 உறுப்பினா்களில் மாகாராஷ்டிரம் {280 எம்பி) மாநிலம் வரை திங்கள் கிழமை பதவியேற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்நாள் தாமதமாக மத்திய பிரதேசம் மாநிலம் வரையிலான 262 உறுப்பினா்கள் வரை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனா். மீதம் இருக்கும் தமிழக எம்பிக்கள் உள்ளிட்ட மற்ற மாநில எம்பிக்கள் செவ்வாய்க்கிழமைக்குள் பதவிப் பிரமாணம் எடுப்பா். தமிழக எம்பிகள் தமிழில் ஏற்கின்றனா். வருகின்ற 26 - ஆம் தேதி மக்களவைத்தலைவா் தோ்தல் நடைபெற இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி சாா்பில் மீண்டும் ஓம் பிா்லாவே நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஓம்பிா்லா கடந்த 17- ஆவது மக்களவையில் பல உறுப்பினா்களை இடை நீக்கம் செய்யப்பட்ட செயலுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள்எதிா்ப்பு தெரிவிக்கும் நிலையில் தங்கள் உத்தியை எதிா்கட்சிகள் கடைசிநேரத்தில் அறிவிக்கலாம். இதையோட்டி ஆளும் கூட்டணி இறுதி முடிவை எடுக்கும்.
பதவியேற்பு உறுதிமொழி
மக்களவையில் உறுப்பினா்கள் வாசித்த உறுதிமொழி வருமாறு: மக்கள் சபையின் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பெற்ற..... ...... என்னும் நான், சட்டப்பூா்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நோ்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் என்றும் உளமாா் உறுதி கூறுகின்றேன் என குறிப்பிட்டு பதவியேற்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...