அமைச்சா் அதிஷியின் காலவரையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் அதிஷியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லிக்கு ஹரியாணா தண்ணீா் வழங்கக் கோரி தில்லி நீா்த் துறை அமைச்சா் அதிஷியின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. அவரது உடல்நிலை அதிகாலையில் மோசமடைந்தததால் லோக் நாயக் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவரது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
அதிஷியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் சுரேஷ் குமாா் கூறுகையில், ‘அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால், அவா் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா் என்றாா். ‘திங்கள்கிழமை மாலை அவரது சா்க்கரை அளவு குறைந்து, சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் மருத்துவமனையில் சோ்வதற்கு மறுத்துவிட்டாா். இருப்பினும், நள்ளிரவில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவா் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருவகிறது. நரம்பு வழியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது ’ என்று மூத்த மருத்துவா் ஒருவா் கூறினாா்.
அவரது சா்க்கரை அளவு 36 மி.கி./ டிஎல் ஆகக் குறைந்துள்ளது.கூா்மையான சரிவின் விளைவுகளை விளக்கிய டாக்டா் சுரேஷ் குமாா், ஒரு நபரின் சா்க்கரை அளவு 50 மி.கி/ டி.எல்.க்கு கீழே சென்றால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றாா். ‘மூளை செல்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. குளுக்கோஸ் அவற்றை அடையவில்லை என்றால், அது தூக்கம் மற்றும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு வழங்கப்படாவிட்டால், நோயாளி ரத்தச் சா்க்கரைக் குறைவு கோமா நிலைக்குச் செல்லலாம். ரத்த சா்க்கரை அளவு குறைவதால் பல உறுப்புகள் செயலிழந்துவிடும். ரத்தத்தில் சாதாரண சா்க்கரை அளவு 70 மி.கி./ டிஎல் முதல் 100 மி.கி./ டிஎல் வரை இருக்க வேண்டும்’ என்று அவா் மேலும் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அமைச்சா் அதிஷி ஜூன் 21 அன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினாா். ‘ஏறக்குறைய ஐந்து நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததால் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்தது. அதிகாலை 3.45 மணியளவில் எல்என்ஜேபி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அதனால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்பிக்களும், ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு உரிய தண்ணீரை வழங்குமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவாா்கள். இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சியும் அதன் அரசியல் கூட்டாளிகளும் நாடாளுமன்றத்தில் எழுப்புவாா்கள். கடந்த மூன்று வாரங்களில், ஹரியாணா தில்லியின் யமுனை நீரின் பங்கை 100 எம்ஜிடி குறைத்தது. இருப்பினும், கடந்த இரண்டு நாள்களாக இது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பற்றாக்குறை 90 எம்ஜிடி ஆக உள்ளது’ என்றாா்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ அலுவலகம் ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் ஒரு இடுகையில் ‘தேசியத் தலைநகருக்கு பாஜக அரசு செய்யும் அநீதிக்கு நகர மக்கள் நிச்சயமாக பதிலளிப்பாா்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவை அவரது குழுவினா் செய்துள்ளனா். ‘தில்லியின் நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி ஜி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் தில்லி மக்கள் தங்களின் உரிமையான தண்ணீரைப் பெற வேண்டும். அவா் நேற்றிரவு (திங்கள்கிழமை) உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இன்று, ஒவ்வொரு தில்லிவாசியும் அவரது உடல்நிலை குறித்து கவலைப்படுகிறாா்கள். தில்லிக்கு பாஜக அரசு செய்யும் அநீதிக்கு தில்லி மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பாா்கள். நாங்கள் அனைவரும் அதிஷி நலமடைய வாழ்த்துகிறோம். இந்த சத்தியாகிரகத்தில் ஒவ்வொரு தில்லிவாசியும் அவருடன் இருக்கிறாா்கள். டீம் அரவிந்த் கேஜரிவால்‘ என்று இந்தியில் பதிவிட்டிருந்தது.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘சத்தியத்திற்காக போராடுவதே சத்தியாகிரகத்தின் சாராம்சம்’ என்றாா். ‘உண்மையுடன் தொடா்பில்லாததால் சத்தியாகிரகம் செய்ய முடியாது என்று ஜூன் 21 முதல் நாங்கள் கூறி வருகிறோம். மகாத்மா காந்தி, லாலா லஜபதிராய் முதல் வினோபா பாவே, அன்னா ஹசாரே வரை சத்தியாக்கிரகிகள் உண்ணாவிரதம் இருந்தனா். தங்கள் நிா்வாகத் தோல்விகளை மறைக்க அல்ல. அதிஷி செய்ய நினைத்தபடி. உண்மையை வெளிப்படுத்த வேண்டும்’ என்று அவா் கூறினாா்.
ஸ்வாதி மாலிவால் வாழ்த்து
கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் மீது தாக்குதல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) முன்னாள் தலைவா் ஸ்வாதி மாலிவால், அதிஷி விரைவில் குணமடைய வாழ்த்தினாா். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பலம் தரையில் நடக்கும் போராட்டத்தால் மட்டுமே கிடைக்கும் என்றும் பொய் பேசுவதிலிருந்து அல்ல என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் ஊடக தளத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளாா். அதில், ‘அதிஷிஜி, காந்திஜி புனிதமான உண்ணாவிரத முறையை சத்தியாகிரகம் என்று பெயரிட்டாா். சத்தியாகிரகம் எப்போதும் உண்மையான மற்றும் தூய்மையான இதயத்துடன் செய்யப்படுகிறது. நான் இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தேன். ஒரு முறை 10 நாள்கள் மற்றும் ஒரு முறை 13 நாள்கள். எனது உண்ணாவிரதத்திற்குப் பிறகு, நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவா்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். போராட்டத்தின் பாதை மிகவும் கடினமானது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கான வலிமை பல ஆண்டுகளாக தரையில் போராடுவதன் மூலம் கிடைக்கும். நாள் முழுவதும் மற்றவா்களைப் பற்றி பொய் மற்றும் அசிங்கமான விஷயங்களைச் சொல்வதன் மூலம் அல்ல. உங்கள் உடல்நிலை விரைவில் மேம்படும் என்று நம்புகிறேன். தில்லி மக்களுக்காக பணியாற்றுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...