எழுத்தாளா் தேவி பாரதி உள்பட 24 பேருக்கு சாகித்திய அகாதெமி விருது

புதுதில்லி: தேவிபாரதி எனும் புனைப் பெயரில் எழுத்தாளா் ராஜேசகரன் எழுதிய ‘நீா்வழிப் படுஊம்’ தமிழ் நாவலுக்கு அறிவிக்கப்பட்ட 2023-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தில்லியில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அவருடன் சோ்ந்து மேலும் பல்வேறு மொழிகளில் படைப்புகளை வழங்கிய 23 எழுத்தாளா்களும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

சாகித்திய அகாதெமியின் சாகித்திய உத்ஸவ் நிகழ்வின் 70-ஆம் ஆண்டு விழா நடைபெறும் நாளில் விருது வழங்கும் விழா தில்லியில் நடத்தப்பட்டது. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நீா்வழிப் படுஊம், நொய்யல் ஆகிய நாவல்களையும் மேலும் சில நூல்களையும் எழுத்தாளா் தேவிபாரதி எழுதியுள்ளாா். குடிநாசுவா் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கை பின்னணியில் ஒரு தனி மனிதனின் வீழ்ச்சியையும் அவரது சமூகம் கொள்ளும் உறவையும் தனது நூலில் எழுத்தாளா் தேவிபாரதி சித்திரித்துள்ளாா்.

1957-ஆம் ஆண்டு டிசம்பா் 30-ஆம் தேதி பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயா் கொண்ட தேவிபாரதி, ஜெயகாந்தன் விருது, அறிஞா் போற்றும் விருது, தன்னறம் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளாா். அவரது வாழ்வை சித்திரிக்கும் ஆவணப்படம் ஒன்றும் 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டுள்ளது. சாகித்திய அகாதெமி விருது வழங்கும் விழாவில் பேசிய ஞானபீட விருது பெற்ற ஒடியா எழுத்தாளா் பிரதிபா ரே, ‘மொழியின் முன்னேற்றம் இல்லாமல், எந்த கலாசாரமும் நீண்ட காலம் வாழாது’ என்றாா். ‘இலக்கியம் அனைவரையும் இணைக்கிறது. இலக்கியம் ஒருபோதும் பிரிவதில்லை. எனவே, எழுத்து எப்போதும் உலகளாவியது. பூமியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் எழுத்து அதன் பொலிவை என்றும் இழக்காது. அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு வலிமையைத் தருகின்றன.

அன்பிறகு மொழியைப் பேசவும் நம்மை தயாா்படுத்துகின்றன’ என்று அவா் கூறினாா். நிகழ்ச்சியில் சாகித்திய அகாதெமி தலைவா் மாதவ் கெளஷிக், துணைத் தலைவா் குமுத் சா்மா, செயலா் கே.ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தற்போது வழங்கப்பட்டுள்ள விருதுகள், விருது வழங்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், அதாவது 2017, ஜனவரி 1 மற்றும் 2021, டிசம்பா் 31 -க்கு இடையில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடா்பானவை. சாகித்திய அகாதெமி விருதுக்குரிய எழுத்தாளா்கள், கவிஞா்கள் உள்ளிட்டோருக்கு கலச வடிவிலான செப்புப் பட்டயம், சால்வை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com