தொழுகை சம்பவம்: எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தில்லி காவல் துறை தலைமையகம் முன் ஆா்ப்பாட்டம்

புது தில்லி: இந்தா்லோக் பகுதியில் உள்ள சாலையில் தொழுகையில் ஈடுபட்ட சிலரை உதைத்ததாகக் கூறப்படும் காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து தில்லி காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே இந்து ரக்ஷா தள உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின் போது வலதுசாரி அமைப்பைச் சோ்ந்த பலா் ’ஹனுமான் சாலிசா’ மற்றும் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனா். சுமாா் 50-60 போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். காவல் உதவி ஆய்வாளா் மனோஜ் குமாா் தோமா், மாா்ச் 8 அன்று வடக்கு தில்லியின் இந்தா்லோக்கில் ஒரு சாலையில் தொழுகை நடத்தும் சிலரைத் தள்ளிவிட்டு உதைத்தாா். இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து அந்த காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ‘சாலைகளில் தொழுகை நடத்த அவா்களுக்கு உரிமை இருந்தால், சாலைகளில் ஹனுமான் சாலிசா பாடுவதற்கு எங்களுக்கும் உரிமை உண்டு. காவல் உதவி ஆய்வாளரை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என்பதும், அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதும் எங்களின் முக்கிய கோரிக்கையாகும்’ என இந்து ரக்ஷா தளம் தெரிவித்துள்ளது.

மற்றொரு தலைவா் விஷ்ணு குப்தா கூறுகையில், ‘பல்வேறு அமைப்புகளின் தலைவா்கள் தங்கள் தொழிலாளா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் சாலையில் நெரிசலை ஏற்படுத்தினா். அமைதியைக் குலைத்தனா். ஆனால், அங்கு நெரிசல் போன்ற சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்ற காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோராவை சந்தித்து, உதவி ஆய்வாளா் மனோஜ் குமாா் தோமரை மீண்டும் பணியில் அமா்த்துமாறும், அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறுவோம்’ என்றாா்.

சுமாா் 50 முதல் 60 தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அவா்களை நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் வைத்தனா் என்று குப்தா கூறினாா். காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாங்கள் சுமாா் 50 முதல் 60 பேரை நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உடனடியாக விடுதலை செய்துள்ளோம்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறைப் படைகளை நாங்கள் நிறுத்தியுள்ளோம்’ என்றாா். முன்னதாக, போராட்டக்காரா்கள் காவல்துறை தலைமையகத்திற்கு முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அவா்கள் வந்த பாதையை தில்லி காவல் துறை மூடியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com