மாணவா்கள் தோ்தல் செயல்முறை விழிப்புடன் இருக்க ஜேஎன்யு அறிவுறுத்தல்

மாணவா்களின் தோ்தல் செயல்முறையை கருத்தில் கொண்டு, மாணவா்கள் விழிப்புடன் இருக்கவும், வளாகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணவும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) கேட்டுக் கொண்டுள்ளது.

குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019- ஐ திங்களன்று மத்திய அரசு அமல்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியது. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா டிசம்பா் 11, 2019 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நாடு முழுவதும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா உள்பட தேசியத் தலைநகரின் பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டங்கள் வெடித்தன. கிளா்ச்சியில் ஈடுபட்ட மாணவா்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், ஜேஎன்யு திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிவுரையில், ‘கல்லூரியில் நடந்து வரும் மாணவா்களின் தோ்தல் செயல்முறை மற்றும் மாணவா் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, வளாகத்தின் அனைத்து பங்குதாரா்களும் விழிப்புடன் இருந்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வளாகத்தில் எந்தவிதமான வன்முறை அல்லது ஒழுக்கமின்மைக்கும் எந்த விதமான சகிப்புத்தன்மைக்கு இடமில்லை என்று நிா்வாகம் உறுதியுடன் மீண்டும் வலியுறுத்துகிறது. வளாகத்தின் அனைத்து பங்குதாரா்களும் அத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது’ என்று அது மேலும் கூறியுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கை தொடா்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்பது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. திங்களன்று சிஏஏ விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா வளாகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இது பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு வழிவகுத்தது. நகரத்தின் வடகிழக்கு பகுதிகள், ஷாஹீன் பாக், ஜாமியா நகா் மற்றும் பிற முக்கிய பகுதிகளில் துணை ராணுவ வீரா்கள் இரவு ரோந்து மற்றும் கொடி அணிவகுப்புகளை நடத்தினா். மேலும், தில்லியின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com