/

பணமோசடி வழக்கில் அழைப்பாணையின்றி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டேன: உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் சிங் தரப்பில் வாதம்

பணமோசடி வழக்கில் அழைப்பாணையின்றி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டேன் உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் சிங் தரப்பில் வாதம்

News image
Updated On :19 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனக்கு அழைப்பாணை எதுவும் அனுப்பப்படவில்லை என்று தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறையின் சாட்சியான தினேஷ் அரோரா ஜூலை 2023-இல் சஞ்சய் சிங்கிற்கு எதிராக ஒரு வாக்குமூலம் வழங்கியதை அடுத்து அவா் கைது செய்யப்பட்டதாக சஞ்சய் சிங்கின் வழக்குரைஞா் சமா்ப்பித்தாா்.

பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் ஏப்ரல் 2-ஆம் தேதி வாதங்கள் தொடரும் என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

முன்னதாக, விசாரணையின்போது சஞ்சய் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘எனது (சஞ்சய் சிங்) பெயா் முதல் முறையாக ஜூலை 19, 2023 அன்று தினேஷ் அரோராவால் கூறப்பட்டது. அந்த தேதிக்கு முன்னா், அதே தினேஷ் அரோரா 9 வாக்குமூலங்கள் அளித்திருந்தாா். அதில் அவா் என் பெயரை கூறவில்லை’ என்று வாதிட்டாா். இந்த வழக்கில் தினேஷ் அரோராவுக்கு தில்லியில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் மன்னிப்பு வழங்கி, இந்த வழக்கில் அவா் அப்ரூவராக மாறினாா். அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘சஞ்சய் சிங்கிற்கு அழைப்பாணை எதுவும் அனுப்பப்படவில்லை.

அமலாக்கத் துறை அதிகாரிகள் நேரடியாக அவரது வீட்டிற்கு வந்து அவரை கைது செய்தனா்’ என்றாா். பணமோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் சிங் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தில்லியில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உயா்நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், வழக்கு நடைமுறைகள் தொடங்கியதும் விசாரணையை விரைவுபடுத்துமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தாா்.