/

தில்லி கலால் கொள்கையை நீட்டித்தது ஆம் ஆத்மி அரசு

தில்லி கலால் கொள்கையை நீட்டித்தது ஆம் ஆத்மி அரசு

News image
Updated On :19 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: தில்லி அரசு அதன் நடைமுறையில் உள்ள கலால் வரி அடிப்படையிலான கொள்கையை வரும் 2024-25 நிதியாண்டுக்கு நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

2024-25-ஆம் ஆண்டிற்கான கலால் வரி அடிப்படையிலான கொள்கையைத் தொடர, 2023-24-ஆம் ஆண்டின் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மொத்த விற்பனை உரிமங்களை வழங்க தகுதி வாய்ந்த ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசின் கலால் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் 1, 2023 முதல் மாா்ச் 31, 2024 வரை நடைமுறையில் இருக்கும் கலால் வரி அடிப்படையிலான கொள்கையின் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மொத்த விற்பனை உரிமங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்க அனைத்து உரிமங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 2024-25-ஆம் ஆண்டிற்கும் தொடரும் என்று கலால் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சில்லறை மற்றும் ஹெச்சிஆா் (ஹோட்டல், கிளப் மற்றும் உணவகம்) வகை உரிமங்களுக்கு தேவையான சுற்றறிக்கைகள் அடுத்த சில நாள்களில் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கலால் வரி அடிப்படையிலான கொள்கை செயல்பாடு, சில்லறை மது வணிகம் தனியாா் நிறுவனங்களில் இருந்து தில்லி அரசு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. இது செப்டம்பா் 2022-இல் செயல்படுத்தப்பட்டது. இது ஏப்ரல் 2023-இல் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. மேலும், அக்டோபா் 2023-இல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

நவம்பா் 17, 2021 அன்று அமல்படுத்தப்பட்ட தில்லி அரசின் கலால் கொள்கை 2021-22, அதன் உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த சில நாள்களுக்குப் பிறகு, அரவிந்த் கேஜரிவால் அரசால் இந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

புதிய கலால் கொள்கை கொண்டு வரப்படும் என அரசு உறுதியளித்திருந்த நிலையில், அது இன்னும் தயாராகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போதுள்ள கலால் கொள்கையின் கீழ், நான்கு தில்லி அரசு நிறுவனங்கள் நகரம் முழுவதும் 684 மதுக்கடைகளை நடத்துகின்றன.