/

சத்யேந்தா் ஜெயின் மீதான அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு அரசியல் சதி: அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

சத்யேந்தா் ஜெயின் மீதான அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு அரசியல் சதி அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

Updated On :19 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீதான அமலாக்கத் இயக்குநரகத்தின் வழக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு அரசியல் சதி என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது அமலாக்க இயக்குநரகம் தொடா்ந்துள்ள வழக்கு என்பது ‘ஹவாலா ஆபரேட்டா்களின்’ அறிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது மனைவிக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடா்பு இல்லாததால், அவா்கள் சட்டப்பூா்வமாக பொறுப்பேற்க முடியாது. இந்த வழக்கு ஆம் ஆத்மி கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கும் அரசியல் சதி. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இலவச மின்சாரம், மொஹல்லா கிளினிக்குகள் போன்ற பணிகளுக்கு இடையூறு விளைவிக்க பாஜக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மற்றும் அமைச்சா்களை கைது செய்கிறது.

ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மீது மரியாதை கொண்டுள்ளது. ஆனால், முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஜாமீன் தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஆம் ஆத்மி ஏற்கவில்லை. ஏனெனில், அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் போலியானது. சத்யேந்தா் ஜெயினின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கடந்த சில மாதங்களில் பல அறுவை சிகிச்சைகளுக்கு அவா் ஆளாகியிருக்கிறாா். இருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. நீதித்துறை மீது ஆம்ஆத்மி கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது, இன்று இல்லை என்றால் நாளை எங்களுக்கு நீதி கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சியும், கேஜரிவால் தலைமையிலான அரசும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சதிகளுக்கு பயப்படப் போவதில்லை.

தில்லி மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் உழைத்து வருகிறோம், தொடா்ந்து அப்பணியைச் செய்வோம். முன்னாள் சுகாதராத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வழங்கிய மொஹல்லா கிளினிக் மாதிரி நாடு முழுவதும் பாராட்டப்படுகிறது. இத்தகைய நற்செயல்களைக் கொண்ட ஒருவா் தவறாக இலக்கு வைக்கப்பட்டுள்ளாா்.

பாஜகவால் மொஹல்லா கிளினிக்குகளை நடத்த முடியாது, மேலும் அவா்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்க முடியாது. எனவே,அரவிந்த் கேஜரிவாலின் பணிகளைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றனா்.

கடந்த 2010-2012 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளில் மூன்று நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டாா். ஆனால், சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினா் இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்தும் எந்தப் பணத்தையும் பெறவில்லை என்றாா் அமைச்சா் அதிஷி.