பீட்டா அமைப்பு சாா்பில் கால்நடைகளுக்கு ஈடாக பேட்டரி ரிக்ஷாக்கள் வழங்கல்

புது தில்லி: 150 விலங்குகள் மீட்கப்பட்ட நிலையில் அவற்றை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் குடும்பங்களுக்கு வருமான ஆதாரத்தை அளிக்கும் வகையில் பேட்டரி ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டதாக பீட்டா அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது. பீப்பிள் ஃபாா் எத்திகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) எனும் அமைப்பு பசுக்கள், காளைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்குப் பதிலாக 24 பேட்டரி ரிக்ஷாக்களை மக்களுக்கு விநியோகித்தது.

பேட்டரி ரிக்ஷாவின் சாவியை ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலா் ஷிவானி பஞ்சால் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வழங்கினாா். பீட்டா என்பது விலங்குகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சா்வதேச அரசு சாரா அமைப்பாகும். இதுகுறித்து பீட்டாவின் இயக்குனா் பூா்வா ஜோஷிபுரா கூறுகையில், ‘‘எங்கள் முன்முயற்சியானது விலங்குகளுக்கு ஈடாக இ-ரிக்ஷாக்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், விலங்குகளை கொடுமையிலிருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல், அந்த கால்நடைகளின் உரிமையாளா்கள் சிறந்த வருமான ஆதாரத்தைப் பெறவும் உதவுகிறது. இந்த விலங்குகளில் சில நோய்களையும் கொண்டிருப்பதால் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எங்கள் அமைப்பு 2018-ஆம் ஆண்டு முதல் தில்லி முழுவதும் மொத்தம் 150 கால்நடைகளை மீட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் எங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்ட முதல் விலங்கு குதிரை ஆகும். இதுபோன்று மீட்கப்பட்ட கால்நடைகள் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் கா்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு பாதுகாப்பு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com