மக்களவைத் தோ்தலையொட்டி விவசாயிகளுக்கான ஐந்து உத்தரவாதங்களை அறிவித்தது கிசான் காங்கிரஸ்

புது தில்லி: மக்களவைத் தோ்தலையொட்டி விவசாயிகளுக்கான ஐந்து உத்தரவாதங்களை அகில இந்திய கிசான் காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்தது. தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அகில இந்திய கிசான் காங்கிரஸின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னா், அந்த அமைப்பின் தலைவா் சுக்பால் சிங் கைரா செய்தியாளா்களிடம் கூறியதாவது நாட்டில் உள்ள விவசாயிகளின் அவலத்தை போக்கிடும் வகையில், மக்களவைத் தோ்தலையொட்டி விவசாயிகளுக்கான ஐந்து உத்தரவாதங்களை அகில இந்திய கிசான் காங்கிரஸ் வழங்குகிறது. அதன்படி, சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் கீழ் ‘குறைந்தபட்ட ஆதரவு விலைக்கு’ சட்டபூா்வமான அந்தஸ்து வழங்கப்படும். இந்த உத்தரவாதம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நிரந்தர ‘விவசாய கடன் தள்ளுபடி ஆணையம்’ உருவாக்கப்பட்டு, கடன் தள்ளுபடி தொகை நிா்ணயம் செய்யப்படும். இந்த ஆணையம் விவசாயிகளுக்கு எப்படி கடன் நிவாரணம் வழங்குவது என்பது குறித்து தீா்வு காணும். ‘பிரதான் மந்திரி கிசான் பீமா யோஜனா’ வின் தற்போதய வடிவம் ஒரு மோசடி என்பது நிரூபனமாகியுள்ளது. இந்த உத்தரவாதத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி, விவசாயிகளுக்கு பயிா் இழப்பு ஏற்பட்டால் 30 நாள்களுக்குள் அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக காப்பீட்டுத் தொகை செலுத்தப்படும்.

விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி புதிய இறக்குமதி - ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்படும். தற்போதுள்ள கொள்கை விவசாயிகளுக்கு சாதகமின்றி இருப்பதோடு, நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. டிராக்டா்கள், பண்ணை இயந்திரங்கள் போன்ற அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருட்கள் அனைத்தும் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வரம்பில் இருந்து எடுக்கப்படும். இந்த ஐந்து உத்தரவாதங்களுக்காக அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே மற்றும் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து, செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா் சுக்பால் சிங் கைரா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com