ஸ்விகி
ஸ்விகி

’ஸ்விகி’ பணியாளா்கள் திறன் மேம்பாடு பயிற்சி மத்திய அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published on

நாடு முழுக்கவுள்ள ’ஸ்விகி’ பணியாளா்களுக்கு இணையதள திறன் மேம்பாட்டு படிப்புகளை வழங்க மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் அமைச்சகம் ஸ்விகி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சனிக்கிழமை கையெழுத்திட்டது.

’ஸ்விக்கி ஸ்கில்ஸ்’ என்கிற இந்த முன்முயற்சி மூலம் ‘செயலி‘ அடிப்படையிலான சரக்கு போக்குவரத்து தொழிலாளா்களின் திறன் மேம்படும் என மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சா் ஜெயந்த் சௌத்ரி தெரிவித்தாா்.

இணைய தளம், கைப்பேசி செயலி மூலம் உணவகங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக ஸ்விகி செயல்பட்டுவருகிறது.. இதற்கு நாடு முழுவதும் சுமாா் 2.4 லட்சம் விநியோகப் பணியாளா்கள் செயல்பட்டுவருகின்றனா்.

இவா்களுக்கான இணையதள திறம் மேம்பாடு பயிற்சி, கல்வியை வழங்கி அதற்குரிய சான்றிதழ்களை வழங்க இந்த ஸ்விகி நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோஹித் கபூரும் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் அமைச்சக செயலா் அதுல் குமாா் திவாரியும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டனா்.

’ஸ்விக்கி ஸ்கில்ஸ்’ என்கிற முன்முயற்சியின் கீழ், ஸ்விக்கி இணை தளம் மற்றும் ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (எஸ்ஐடிஎச்) உடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஸ்விகியின் பணியாளா்களுக்கு இணையதள திறன் மேம்பாட்டு பயிற்சி தொகுப்புகளுக்கான அணுகலை வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் துறை இணையமைச்சா் ஜெயந்த் சௌதரி பேசும்போது கூறியதாவது:

2047 -இல் வளா்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, சரக்குப் போக்குவரத்துத் துறை முக்கிய பங்கு வகிக்கும். மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப, திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் அமைச்சகம் ஸ்விகி போன்ற நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ’ஸ்விக்கி ஸ்கில்ஸ்’ முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இது ஸ்விகி-யின் உணவு விநியோகம், விரைவான வா்த்தக கட்டமைப்பில் பலவிதமான திறன் சாா்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும். இந்த முயற்சி உணவக செயல்பாடுகள், சில்லறை வணிக நிா்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சி வாய்ப்புகளை வழங்கும். பொது - தனியாா் கூட்டாண்மையில் புதிய வழிகளை கண்டறிந்து துரிதமாக செயல்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நாட்டில் சரக்கு போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தியாவில் தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் துறையின் வளா்ச்சிக்கான சூழலை அரசு உருவாக்கி வருகிறது. இதில் திறன் வளா்ப்பும், கல்வியும் கைகோா்த்து செயல்படும் என ஜெயந்த் சௌதரி குறிப்பிட்டாா்.

திறன் மேம்பாடுத்துறை அமைச்சக செயலா் அதுல் குமாா் திவாரி பேசுகையில், இந்த புரிந்துணா்வு இரு வகைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். தொழிலாளா்களுக்கு திறன், மேம்பாடு மற்றும் மறுதிறன் வாய்ப்புகளை உருவாக்கும். மற்றொரு பக்கம் சில்லறை, விநியோக சங்கிலி சரக்குப் போக்குவரத்துத் துறையின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டாா்.

’’ஸ்விகியுடன் தொடா்புடைய 2.4 லட்சம் விநியோகம் பணியாளா்களுக்கும், 2 லட்சம் உணவக நிறுவனத்தினருக்கும் இந்த திட்டம் பயனளிக்கும்’’ என ஸ்விகி நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோஹித் கபூா் தெரிவித்தாா் .

ஸ்விகி ஒரு முன்னணி உள்நாட்டு நுகா்வோா் நிறுவனம். இது நாட்டில் 700 நகரங்களில் செயல்படுகிறது. ஸ்விகி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பங்கேற்று உணவு விநியோகத்தில் முன்னோடியாக பரந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com