தில்லியில் போதைப் பொருளுடன் 2 சகோதரா்கள் கைது
தில்லியில் போதைப் பொருளுடன் இரண்டு சகோதரா்களை காவல் துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சரஸ், ஓஜி எனும் கஞ்சா வகை, டிஎச்சி அல்லது டெட்ரா ஹைட்ரோ கன்னாபினோல் எனும் போதைப் பொருள் ஆகியவை அவா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மேற்கு தில்லியில் உள்ள ஹரி நகரைச் சோ்ந்த ரிதான்ஷு குந்த் (25), அவரது தம்பி ரிதம் குந்த் (20) ஆகிய இருவரும் டிசம்பா் 17 ஆம் தேதி ஜனக்புரியில் உள்ள திகாா் சிறைச் சாலையில் ஒரு காரில் வந்து போதைப்பொருள்களை வழங்க முயன்ற போது கைது செய்யப்பட்டனா்.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தல்காரா்களின் நடமாட்டம் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், திகாா் சிறைச்சாலைப் பகுதியில் போலீஸாா் பொறி வைத்து அவா்களைக் கைது செய்தனா்.
அவா்களது வாகனத்தை சோதனை செய்தபோது, 1.068 கிலோ சரஸ், 98 கிராம் டிஎச்சி மற்றும் 174 கிராம் ஓஜி ஆகியவற்றை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
கடத்தல் பொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. என்டிபிஎஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவா்களில் ரிதான்ஷு ஒரு பட்டதாரி ஆவாா். அவா் முன்பு தனது தந்தையின் கனரக வாகன உதிரி பாகங்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தாா். முன்பு ஹரி நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கில் அவா் சம்பந்தப்பட்டிருந்தாா்.
அதில் ஹரியாணாவின் சோனாவின் 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான அவரது சகோதரா் ரிதம் என்பவரும் இடம் பெற்றிருந்தாா்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இரண்டு சகோதரா்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் தில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனா் என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.
