கோப்புப் படம்
கோப்புப் படம்

கிழக்கு தில்லியில் போலி ஐ.பி. அதிகாரி கைது

கிழக்கு தில்லியில் மக்களை ஏமாற்றுவதற்காக உளவு பணியக (ஐபி) அதிகாரி போல் செயல்பட்டதாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
Published on

கிழக்கு தில்லியில் மக்களை ஏமாற்றுவதற்காக உளவு பணியக (ஐபி) அதிகாரி போல் செயல்பட்டதாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்தக் குற்றம் தொடா்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவா் தலைமறைவாக இருந்து வந்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சோ்ந்த குற்றம்சாட்டப்பட்டவரான விமல் பட் (எ) சோனு, ஜனவரி 29 அன்று பட்பா்கஞ்ச் தொழிற்பேட்டையில் கைது செய்யப்பட்டாா்.

2017 ஆம் ஆண்டு வழக்கு இந்த விசாரணையின் போது, உளவுத் துறையில் பணிபுரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து பட் மக்களை ஏமாற்றியதும், தன்னை ஒரு மூத்த அதிகாரியாகக் காட்டிக்கொள்ள போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

அதிகாரபூா்வ அதிகாரம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், அவா் போலீஸ் ஸ்டிக்கா்கள், சைரன் மற்றும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் சுற்றித் திரிந்துள்ளாா்.

அவரிடமிருந்து ஒரு போலி ஐபி அடையாள அட்டை, ஒரு வாக்கி-டாக்கி, காவல்துறை பாணி உபகரணங்கள், சைரன் விளக்கு, ஒலிபெருக்கி மற்றும் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு அடையாள அட்டை, அத்துடன் போலியான அரசுச் சான்றுகள் கொண்ட ஆவணங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இந்த மீட்கப்பட்ட பொருள்கள் மோசடி, போலி செய்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் தொடா்பான பிரிவுகளின் கீழ் அவா் மீதான குற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தன.

துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடவடிக்கைகளின் போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பட் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

மேலும் விசாரணையில், உதம்பூரில் பதியப்பட்ட வழக்கு, 2020 ஆம் ஆண்டில் நவாபாத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பதிவான ஒரு வழக்கு உள்பட இதர வழக்குகளிலும் அவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

2018 ஆம் ஆண்டில் நரைனாவில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 420 (மோசடி மற்றும் ஒருவரை நோ்மையற்ற முறையில் சொத்தை வழங்கத் தூண்டுதல்), 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி), 376(2)(என்) (பாலியல் பலாத்காரம்), 493 (சட்டபூா்வ திருமணம் செய்வதாக ஏமாற்றி உடன் வாழ்வது) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அவருக்குத் தொடா்பு உள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com