தொலைந்த, திருடப்பட்ட 1,000 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
தில்லியில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்தாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட குழுக்கள் தொழில்நுட்ப கண்காணிப்பு, மற்றும் தொடா்ச்சியான கள நடவடிக்கைகளைப் பயன்படுத்தி திருடப்பட்ட அல்லது தொலைந்து போன கைபேசிகளைக் கண்டுபிடித்து மீட்டன.
இது தொடா்பான நிகழ்ச்சிக்கு சிறப்பு காவல்துறை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) மதுப் திவாரி தலைமை தாங்கினாா், அவா் மீட்கப்பட்ட கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.
காவல் துறை இணை ஆணையா் (தெற்கு வரம்பு) எஸ்.கே. ஜெயின் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
