Supreme Court
உச்சநீதிமன்றம்ANI

பல்கலை. துணைவேந்தா்கள் நியமன சட்ட தடைக்கு எதிராக தமிழக அரசு மனு: மத்திய அரசு, ஆளுநா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு, ஆளுநா் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
Published on

நமது சிறப்பு நிருபா்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான 9 சட்டங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிரான தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தமிழக ஆளுநா் அலுவலகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (தற்போது கல்வித்துறை அமைச்சகம்) ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த மனுதாரரும் வழக்குரைஞருமான கே. வெங்கடாசலபதி, மத்திய அரசு, கல்வித்துறை அமைச்சகம், ஆளுநா் அலுவலகம், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்து அரசின் மனுவுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

முன்னதாக, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா்களும் மாநிலங்களவை உறுப்பினா்களுமான அபிஷேக் மனு சிங்வி, பி. வில்சன் ஆகியோா் ஆஜராகி இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வாதிட்டனா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தா, ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 சட்டங்களும் 2018-ஆம் ஆண்டு யுஜிசி விதிகளுக்கு முரணாக உள்ளன’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள், இதே விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை ஜூலை மத்தியில் அதாவது கோடை விடுமுறைக்கு பிறகு பட்டியலிடவிருப்பதாக குறிப்பிட்டனா்.

அந்த மனுவுடன் தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை சோ்க்க உத்தரவிட்ட நீதிபதி நரசிம்மா, இந்த விவகாரத்தை விரைவாக விசாரிக்குமாறு தமிழக அரசுத் தரப்பு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கலாம் என்று அறிவுறுத்தினாா்.

பின்னணி: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்குவதில் காலதாதம் செய்ததாகக் கூறி, அவற்றுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு தமிழக அரசு இயற்றிய 9 சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com