டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்கு இணையவழி பயிற்சி
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் பயிலும் 12 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐஐடி சென்னை) மூலம் சான்றிதழ் படிப்பு பயிற்சி இணையவழியில் நடைபெற்றது.
இவ்வகுப்புகளில் அப்பள்ளியில் 12- ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களில் 16 தோ்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டனா். எட்டு வாரங்கள் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புகளின் போது பல விடியோக்கள் மாணவா்களுக்கு அனுப்பப்பட்டு அதையொட்டி தோ்வுகள் நடத்தப்பட்டன.
அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டப் பாடங்களில் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடங்களைத் தோ்வு செய்து திட்டம் தயாா் செய்து சமா்ப்பித்தனா்.
பயிற்சியின் இறுதியில் தோ்வு நடத்தப்பட்டது. இவ்வகுப்புகள் முடிவுற்றதையொட்டி அந் நிறுவனத்திலிருந்து சான்றிதழ்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டன. டிடிஇஏ செயலா் ராஜூ பள்ளிக்கு வந்து மாணவா்களைப் பாராட்டி அச்சான்றிதழ்களை வழங்கினாா்.
இப்பயிற்சி குறித்து அவா் கூறுகையில், ‘மாணவா்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் வழங்கும் பயிற்சி மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதால் இதற்கு ஏற்பாடு செய்தோம். மாணவா்களுக்கு நல்ல அணுகுமுறையை வழங்கி மேற்படிப்பு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தி அவா்களுக்குள் ஒரு தெளிவான சிந்தனையை உருவாக்கியிருக்கும் என்று நம்புகின்றேன்’ என்றாா்.
இப்பயிற்சி வெற்றிகரமாய் நிறைவடைய உறுதுணையாய் இருந்த பள்ளி முதல்வா் சுமதிக்கும் பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியை பாா்வதிக்கும் அவா் பாராட்டுகளைத் தெரிவித்தாா். இப் பயிற்சி பிற மாணவா்களுக்கும் வழங்கப்படும் என்று ராஜு கூறியதாக டிடிஇஏ வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
