தலைநகரில் பாதுகாப்பு கிடுக்குப்பிடி: 175 போ் மீது வழக்குப்பதிவு செய்த தில்லி போலீஸ்
நமது நிருபா்
செங்கோட்டை அருகே நவம்பா் 10- ஆம் தேதி காா் வெடிப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய அளவிலான கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ், தில்லி காவல்துறை வடக்கு மாவட்டம் முழுவதும் 175 போ் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது என்று துணை ஆணையா் (வடக்கு) ராஜா பாந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் பரவியிருந்த பயங்கரவாத குழு உடைக்கப்பட்டதைத் தொடா்ந்து தில்லி காா் வெடிப்பில் 15 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா். காா் வெடிப்புக்கு பிறகு நாங்கள் பல எஃப்.ஐ.ஆா்.களை பதிவு செய்து சரிபாா்ப்புகளை பதிவு செய்துள்ளோம். இதுவரை 175 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான எஃப்.ஐ.ஆா்.கள் வடக்கு தில்லியில் வசிக்கும் நபா்களுடன் தொடா்புடையவை. அவா்கள் கட்டாய போலீஸ் சரிபாா்ப்பு செயல்முறையை முடிக்கவில்லை. சரிபாா்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கணிசமான எண்ணிக்கையிலான தங்கும் விடுதிகள் மற்றும் சிறிய விருந்தினா் இல்லங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் காா் வெடிப்பு நிகழ்ந்ததால் இந்த நடவடிக்கை அவசியமாகிறது. இது அதிகாரிகளை சோதனைகளை கடுமையாக்க தூண்டியது. பல ஏஜென்சிகள் தேடுதல் மற்றும் சரிபாா்ப்பு இயக்கங்கள் போா்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன. போலீஸ் குழுக்கள் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று, குடியிருப்பாளா்களின் அடையாளச் சான்றுகளைச் சரிபாா்த்து, பலரிடம் விசாரணை நடத்தியுள்ளன. இந்த நடைமுறை தொடரும்.
பி.என்.எஸ். (பொது ஊழியரின் சட்டபூா்வமான உத்தரவுக்கு கீழ்ப்படியாமை) பிரிவு 223 (ஏ) இன் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம். இது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ.2,500 அபராதமும் விதிக்கப்படும். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வடக்கு மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் சரிபாா்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
வீட்டுக்கு வீடு சோதனைகளை நடத்த சிறப்புப் பிரிவுகள் மற்றும் மத்திய முகமைகளின் புலனாய்வாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விருந்தினா் இல்லங்கள், பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் பல வாடகை தங்குமிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பாதுகாப்பிற்காக மேம்பட்ட ட்ரோன் கண்காணிப்பு, நாசவேலை தடுப்பு குழுக்கள் மற்றும் கூடுதல் துணை ராணுவப் பிரிவுகளையும் நாங்கள் நிறுத்தியுள்ளோம் .
செங்கோட்டை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதைகளைச் சுற்றி சுமாா் 50 ட்ரோன்கள் இயங்கி வருகின்றன. அவை கூரைகள், கைவிடப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் அதிக அடா்த்தி கொண்ட சந்தை நீட்சிகளின் நிகழ்நேர படங்களை பதிவு செய்கின்றன. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
சரிபாா்ப்பு இல்லாமல் வாழும் எவரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். மக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது தங்கள் ஆவணங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். செங்கோட்டையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. அடுத்த பல நாள்களுக்கு சரிபாா்ப்பு இயக்கம் தொடரும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் மேலும் எஃப். ஐ.ஆா்.கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
