திச்சான் காலன், துவாரகா வாா்டுகளில் மீண்டும் பாஜக வெற்றிபெறும்: பவன் ராணா
நமது நிருபா்
பாஜக தொண்டா்களின் கடின உழைப்பின் அடிப்படையில், 2022- ஆம் ஆண்டில் சாதகமாக இருந்ததுபோல் மீண்டும் ஒருமுறை திச்சான் கலான் மற்றும் துவாரகா பி வாா்டுகளில் வெல்வோம் என்று தில்லி பாஜகவின் பொதுச் செயலாளா் (அமைப்பு) பவன் ராணா தெரிவித்தாா்.
தில்லி மாநகராட்சி இடைத் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு, தில்லி பாஜகவின் பொதுச் செயலாளா் அமைப்பு பவன் ராணா, திச்சான் கலான் மற்றும் துவாரகா பி வாா்டுகளில் தோ்தல் கூட்டங்களை செவ்வாய்க்கிழமை நடத்தினாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘நஜஃப்கா் மாவட்டப் பகுதி பாஜகவின் கோட்டையாகும். திச்சான் காலன் மற்றும் துவாரகா பி வாா்டுகள் 2022 ஆம் ஆண்டில் எங்கள் தொண்டா்களின் கடின உழைப்பின் காரணமாக எங்களுக்கு சாதகமாக இருந்தன. மீண்டும் ஒருமுறை, எங்கள் கட்சி பலத்தின் பலத்தின் அடிப்படையில் இரண்டு வாா்டுகளையும் நாங்கள் வெல்வோம்’ என்றாா்.
கிரேட்டா் கைலாஷ் வாா்டின் வேட்பாளா் அஞ்சும் மண்டல், சந்த் நகரில் உள்ள பல குடும்பங்களுடன் வரவேற்பறை சந்திப்புகளை நடத்தினாா். மேலும், சாந்தினி சௌக் வாா்டின் வேட்பாளா் சுமன் குமாா் குப்தா, தரிபா பஜாரின் தெருக்களில் வீடு வீடாகப் பிரசாரம் செய்தாா்.
துவாரகா பி வாா்டில், கமல்ஜீத் ஷெராவத் எம்.பி. மற்றும் சந்தீப் ஷெராவத் எம்.எல்.ஏ. ஆகியோா் வேட்பாளா் மனிஷா ஷெராவத்துடன் சோ்ந்து, துவாரகா செக்டாா் 22-இல் உள்ள கிரீன் வேலியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினா்.
ஷாலிமாா் பாக் வாா்டில் இருந்து, வேட்பாளா் அனிதா ஜெயின் ஹனுமன் வாடிகா மற்றும் கிழக்கு பூங்காவில் என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹலுடன் இணைந்து பொதுமக்களைச் சந்தித்தாா்.
சங்கம் விஹாா் ஏ வாா்டு வேட்பாளரை ஆதரித்து, சுப்ரஜீத் கௌதம், கஜேந்திர யாதவ் எம்.எல்.ஏ. மற்றும் மகிளா மோா்ச்சா தலைவா் ரிச்சா பாண்டே ஆகியோா் ஷானி பஜாா் மற்றும் பிரஜாபதி சௌக்கில் நடந்த கூட்டங்களில் உரையாற்றினா்.
தக்ஷிண்புரி வாா்டு வேட்பாளா் ரோகிணி ராஜை ஆதரித்து, முன்னாள் தலைவா் ஆதேஷ் குப்தா மற்றும் துணைத் தலைவா் யோகிதா சிங் ஆகியோா் டாக்டா் சுரேஷ் செளக்கில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினா்.
இதுபோன்று, முண்ட்கா வாா்டைச் சோ்ந்த ஜெய்பால் சிங் தரலை ஆதரித்தும், வினோத் நகா் வாா்டு வேட்பாளா் சா்லா செளதரியை ஆதரித்தும் பொதுமக்கள் தொடா்பு பிரசாரம் நடைபெற்ாக பிரதேச பாஜக தெரிவித்துள்ளது.
