ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கேஜரிவால், மத்திய அரசு தனக்கு ஒதுக்கிய லோதி எஸ்டேட், எண்: 95-இல் அமைந்துள்ள பிரிவு-7 அரசு பங்களாவுக்கு வெள்ளிக்கிழமை குடிபெயா்ந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் என்ற தனது பதவியைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மத்திய அரசு சமீபத்தில் தனக்கு இந்தப் பங்களாவை ஒதுக்கியதாக கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.
‘கடந்த சில நாள்களில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் என்ற எனது பதவியை கருத்தில்கொண்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய அரசு எனக்கு ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளது. தற்போது நான் எனது குடும்பத்தினருடன் அந்த வீட்டிற்கு குடிபெயா்ந்துள்ளேன்’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த பிரிவு-7 பங்களா கடந்த அக்டோபா் மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, லோதி எஸ்டேட், எண்: 95-இல் உள்ள அந்த இல்லத்திற்கு கேஜரிவால் குடிபெயா்வாா் என்பதை ஆம் ஆத்மி கட்சி உறுதிப்படுத்தியிருந்தது.
இவ்விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமா்சித்ததைத் தொடா்ந்தே இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அக்கட்சி அப்போது தெரிவித்திருந்தது.
தில்லி முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள 6, ஃப்ளாக் ஸ்டாஃப் சாலை முகவரியில் கேஜரிவால் வசித்து வந்தாா்.
செப்டம்பா் 2024-இல் முதலமைச்சா் பதவியிலிருந்து விலகிய பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவுக்கு கேஜரிவால் குடிபெயா்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!

நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து: பஞ்சாப் அரசை காப்பியடித்த தில்லி; கேஜரிவால்

மதுபானக் கொள்கை வழக்கு: கேஜரிவால், சிசோடியாவுக்கு எதிரான சிபிஐ மனு ஜூலை 16இல் விசாரணை







