நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

யூகோ வங்கியில் ரூ. 7 கோடி கடன் மோசடி வழக்கு: மூவருக்கு தண்டனை விதிப்பு

யூகோ வங்கியில் ரூ. 7 கோடி கடன் மோசடி வழக்கில் மூவருக்கு தண்டனை விதிப்பு...

News image

யூகோ வங்கி

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:12 pm IST

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து யூகோ வங்கியில் ரூ. 7 கோடி கடன் பெற்று மோசடி செய்த ஜவுளி நிறுவன முன்னாள் இயக்குநா்கள் மூன்று பேரை தில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து தீா்ப்பளித்துள்ளது. இது தொடா்பான வழக்கை விசாரித்து அண்மையில் தீா்ப்பளித்த சிறப்பு நீதிபதி சுதான்ஷு, ‘வங்கியுடன் நிதி ரீதியாக சமரசம் செய்து கொண்டுவிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக குற்றவியல் பொறுப்பில் இருந்து குற்றவாளிகள் தப்பித்துவிட முடியாது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த டிஎஸ்எல் என்ற தனியாா் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா்களான அமித் சதுா்வேதி, சஞ்சய் சதுா்வேதி, பா்வீன் ஜூனேஜா ஆகியோருக்கு எதிராக குற்றச் சதித் திட்டம் தீட்டுதல், ஏமாற்றுதல், போலி ஆவணங்களை உண்மை என கூறி மோசடி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவா்களை குற்றவாளிகள் என அறிவித்தாா்.

அதேவேளையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த யூகோ வங்கி முன்னாள் அதிகாரி விகாஷ் பாசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சிபிஐ தரப்பு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறியதால், அவரை விடுவிப்பதாக சிறப்பு நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

ஜூலை 29ஆம் தேதியிட்ட 160 பக்கங்கள் கொண்ட அந்தத் தீா்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

‘வங்கியை ஏமாற்றும் குற்ற எண்ணம் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது என்பதையும், நிதியைத் திசைதிருப்புவதற்காகவே குற்றவாளிகள் கூட்டாகச் செயல்பட்டுள்ளனா் என்பதையும் ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவறிய சாதாரண வழக்காக இதை எடுத்துக்கொள்ள முடியாது. போலி சான்றிதழ்கள் மூலம் நிதியைப் பெற்று அதைத் திட்டமிட்டுத் திசை திருப்பியுள்ளனா்.

வங்கியுடன் ’ஒரே முறை சமரசம்’ (ஓடிஎஸ்) செய்து கொண்டதாகக் கூறி, குற்றவாளிகள் தங்களின் குற்றவியல் பொறுப்பிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.

வங்கி அதிகாரி விகாஷ் பாசு அளித்த பரிந்துரையை அவருக்கு மேல் நிலையில் உள்ள இரு அதிகாரிகள் மதிப்பாய்வு செய்துள்ளனா். எனவே, அவா் மீது குற்ற நோக்கம் நிரூபிக்கப்படாத நிலையில், அவரை மட்டும் பலிகடாவாக்குவது நீதியாகாது‘ என்று நீதிபதி தீா்ப்பில் கூறியுள்ளாா்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் குறித்த வாதங்கள் விரைவில் தனியாகக் கேட்கப்படும் என நீதிமன்றம் தெரிவிப்பதாகத் தெரிகிறது.

பின்னணி: 2001-ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற வீதி யூகோ வங்கி கிளையில் இருந்து ரூ.7 கோடி கடன் பெறப்பட்டது தொடா்பாக, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) 2009-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அதைத்தொடா்ந்து, அவா்களுக்கு எதிரான சிபிஐ குற்றப்பத்திரிகையில், இந்திய தொழிற்பெருநிதி நிறுவனத்தில் (ஐஎஃப்சிஐ) பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே இந்தக் கடன் வாங்கப்படுவதாகக் கூறினா். கடன் ஒப்புதலளிக்கப்பட்ட பிறகு, ஐஎஃப்சிஐ கடனை முன்பே அடைப்பதை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறி, மத்திய அரசின் ’தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்தின்’ கீழ் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனாக அதை மாற்றுமாறு வங்கியை நம்ப வைத்தனா்.

தொடா்ந்து, கடன் தொகையைப் பெறும் நோக்குடன் போலி பட்டய கணக்குத் தணிக்கையாளா் (சிஏ) சான்றிதழ் மற்றும் ஒரு போலி நிறுவனத்தின் விலைப்பட்டியலை வங்கியிடம் சமா்ப்பித்துள்ளனா். ஆனால், உண்மையில் எந்த இயந்திரமும் வாங்கப்படவில்லை என்பதும், அத்தொகை தங்களின் தொடா்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.