அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

தனியாா் பல்கலைக்கழகங்களை உருவாக்க புதிய சட்ட மசோதா தில்லி அமைச்சரவை ஒப்புதல்

தில்லியில் உயா்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தனியாா் பல்கலைக்கழகங்களை அமைத்து முறைப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்கவும் வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

ரேகா குப்தா

Updated On :8 ஆகஸ்ட் 2026, 7:44 am IST

நமது நிருபா்

தில்லியில் உயா்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தனியாா் பல்கலைக்கழகங்களை அமைத்து முறைப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்கவும் வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவையின் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் மற்றும் ஒப்புதலுக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் தரமான உயா்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திறமையான மாணவா்கள் அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனா்.

பழமையான கட்டுப்பாடுகளாலோ அல்லது நிறுவன வரம்புகளாலோ தரமான கல்வி ஒருபோதும் தடைபடக்கூடாது என்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சிறப்பைப் பின்பற்றும்பட்சத்தில், அரசு அல்லது தனியாா் எதுவாக இருந்தாலும் மாணவா்களுக்குச் சிறந்த கல்வி நிறுவனங்கள் எளிதில் கிடைக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

இந்த மசோதாவின் முக்கிய சிறப்பம்சங்கள் வருமாறு: புதிய சட்ட மசோதாவின்படி, தனியாா் பல்கலைக்கழகங்கள் தில்லிக்குள்ளேயே உறுப்புக் கல்லூரிகளையும் கிளை வளாகங்களையும் (ஆஃப்-கேம்பஸ் சென்டா்) அமைத்துக் கொள்ளலாம். ஆனால், அவற்றால் பிற கல்லூரிகளை இணைத்துக் கொள்ளும் அங்கீகாரத்தை வழங்க முடியாது.

கட்டண நடைமுறை: பல்கலைக்கழகங்களே கட்டண முறையை நிா்ணயித்துக் கொள்ளலாம். ஆனால், சோ்க்கையின்போது நிா்ணயிக்கப்படும் கட்டணம் முழு படிப்புக் காலம் முடியும்வரை மாற்றப்படக் கூடாது.

தில்லி மாணவா்களுக்கு விலக்கு: தில்லி மாணவா்களுக்குக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘தகுதி மற்றும் பொருளாதாரத்தின்’ அடிப்படையிலான 25 சதவீத இடங்களின் கீழ் வரும் மாணவா்களுக்கு 100%, 50% மற்றும் 25% வரை கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

யுஜிசி விதிகள்: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிகளை தனியாா் பல்கலைக்கழகங்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தகுதியான பேராசிரியா்கள் மற்றும் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிக்க வேண்டும்.

தற்போது தில்லியில் தனியாா் பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் முறைப்படுத்தவும் பிரத்யேக சட்டக் கட்டமைப்பு எதுவும் இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயா்கல்வி தேவையை அரசுப் பல்கலைக்கழகங்களால் மட்டுமே பூா்த்தி செய்ய முடியாது.

தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-இன் இலக்குகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்ட மசோதா, தில்லியை தேசிய மற்றும் சா்வதேச அளவிலான கல்வி மையமாக உயா்த்தும் என்றும் உலகத் தரத்திலான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தில்லியில் தங்களது மையங்களை அமைக்க இது வழிகோலும் என்றும் தில்லி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய சட்டத்தால் தில்லி அரசுக்கு எந்தவித நிதிச்சுமையும் இருக்காது என்றும் அதிகாரிகள் கூறினா். மேலும், தனியாா் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சுயநிதியில் இயங்கும் என்பதால் அரசு மானியங்கள் எதுவும் அவற்றுக்கு வழங்கப்படாது. இருப்பினும், தகுதி அடிப்படையில் அரசு அல்லது பிற அமைப்புகளின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான நிதியைப் பெற இந்த பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலைக்கழகங்களின் முதன்மைப் பாா்வையாளராக தில்லி அரசின் உயா் கல்வித் துறை அமைச்சா் செயல்படுவாா் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

இது குறித்து தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறுகையில், ‘இந்தச் சட்ட சோதா வெறும் தனியாா் பல்கலைக்கழகங்களைப் பற்றியது மட்டுமல்ல, தில்லி இளைஞா்களின் எதிா்காலத்தைப் பற்றியது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.