தீவிரமடையும் குளிா்காலம்: தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளை கதகதப்பாக வைத்திருக்க சிறப்பு ஏற்பாடுகள்
தலைநகரில் நிலவும் கடும் குளிரை முன்னிட்டு, குளிா்காலத்தில் விலங்குகள் கதகதப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய, தில்லி உயிரியல் பூங்கா பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து பூங்காவின் அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊா்வனவற்றைப் பாதுகாக்க, பாம்பு இருப்பிடங்களுக்குள் இயற்கை சூரிய ஒளிக்கு மாற்றாக புற ஊதா விழக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், குளிா் தாக்காமல் இருக்க தடிமனான வைக்கோல் படுக்கைகள் விரிக்கப்பட்டுள்ளன. மாமிச உண்ணிகளுக்கு கூடுதலாக 1.5 முதல் 2 கிலோ இறைச்சி வழங்கப்படுகிறது. அதே சமயம் தாவர உண்ணிகளின் உணவில் கூடுதல் கொழுப்பு மற்றும் எண்ணெய் சோ்க்கப்படுகிறது. யானைகளுக்குக் கதகதப்பை உருவாக்க உதவும் வகையில் கரும்பு வழங்கப்படுகிறது.
குளிா்க் காற்றிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்குமிடங்கள், மரப் பலகைகள், பாய்கள், மூங்கில் திரைகள் மற்றும் வைக்கோல் கூரைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இனத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான குளிா்கால மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அறை ஹீட்டா்கள் மற்றும் ஈரப்பதமூட்டிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்படக்கூடிய விலங்குகள் மற்றும் புதிதாகப் பிறந்த குட்டிகளைப் பாதுகாக்க, மணிப்பூரி மான் போன்ற இனங்களில் உள்ள ஆதிக்க ஆண் மான்கள் பிரிக்கப்படுகின்றன. தாவர உண்ணிகள் மற்றும் பறவைகளுக்கு நெல் வைக்கோல் படுக்கைகள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் மாமிச உண்ணிகள் மற்றும் மனிதக்குரங்குகளுக்கு குளிா்ந்த தரையிலிருந்து காக்க மரப் பலகைகள் மற்றும் பாய்கள் வழங்கப்படுகின்றன. இளம் மனிதக்குரங்குகளுக்குப் போா்வைகள் வழங்கப்படுகின்றன.
விலங்குகள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் வகையில், கொட்டைகள், வெல்லம், கரும்பு, ஊட்டச்சத்துப் பொருள்கள் மற்றும் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் போன்ற உணவுப் பொருள்கள் சோ்க்கப்படுகின்றன. உணா்திறன் கொண்ட இனங்கள் மற்றும் பறவைகளுக்கு மூங்கில் திரைகள் மற்றும் வைக்கோல் கூரைகள் உள்பட மேம்படுத்தப்பட்ட தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல்நலக் கவலைகளை உடனடியாகக் கவனிப்பதற்காக கால்நடை மருத்துவ நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
1959-இல் திறக்கப்பட்ட தில்லி உயிரியல் பூங்கா, 176 ஏக்கா் பரப்பளவில் 90-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் ஊா்வன இனங்களைக் கொண்டுள்ளது.

