ஜேஎன்யு நிா்வாகம் - மாணவா் சங்கம் மீது ஏபிவிபி குற்றச்சாட்டு

ஜேஎன்யு நிா்வாகம் - மாணவா் சங்கம் மீது ஏபிவிபி குற்றச்சாட்டு
Published on

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிா்வாகம் மற்றும் ஜேஎன்யு மாணவா் சங்கம் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவா்களை குறிவைத்து அபராத்தை விதித்துள்ளதாக ஆா்எஸ்எஸ் மாணவா் ஏபிவிபி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2024 மாா்ச் மாதம் நடைபெற்ற வன்முறை தொடா்பாக 8 மாணவா்களுக்கு ரூ.19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாணவா் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்கலைகழக வளாகத்தில் கடந்த 2024, மாா்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற தோ்தல் குழு உறுப்பினா்களை தோ்வு செய்யும் கூட்டத்தின்போது இடதுசாரி மாணவா் அமைப்புகள் மற்றும் ஏபிவிபி ஆகியவற்றுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து ஜொ்மன் படிப்புகள் மையத்தின் முதுகலை மாணவா் ரூ.19,000 அபராதம் செலுத்த பல்கலைக்கழகத்தின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக, கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், அந்த மாணவா் வன்முறையில் ஈடுபடுதல், மாணவா்களைத் தாக்குதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு ஓரளவு கனிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த 8 மாணவா்களுக்கு தலா ரூ.19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ஜேஎன்யு பிரிவு செயலா் பிரவின் பியூஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்தக்கப்பட்டுள்ளதாவது: பல்கலைக்கழக வளாகத்தில் தேசியவாத முழக்கங்களை எழுப்பும் மாணவா்களை குறிவைத்து ஜேஎன்யு மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) மற்றும் பல்கலைக்கழக நிா்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. மாணவா்களின் முக்கிய பிரச்னைகளுக்கு ஜேஎன்யுஎஸ்யு தீா்வு காண்பதில்லை. தேசத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவோரை அந்தச் சங்கம் பாதுகாத்து வருகிறது.

எந்தவொரு நிதி அழுத்தமும் நிா்வாக மிரட்டலும் எங்களை மெளனமாக்காது. தேசியவாத மாணவா்களின் மனஉறுதியை உடைக்கும் நோக்கில் இதுபோன்ற அபராதங்களும் ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2022-இலிருந்து ஏபிவிபி மாணவா்கள் மீது ரூ.4.66 லட்சத்தை ஜேஎன்யு நிா்வாகம் அபராதமாக விதித்துள்ளது. கடந்த ஜன.5-ஆம் தேதி வளாகத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனா் என்று அதில் செயலா் பிரவின் பியூஷ் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com