சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

2018 சாலை விபத்தில் இறந்த 24 வயது மென்பொருள் பொறியாளரின் பெற்றோருக்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Published on

புது தில்லி: 2018 சாலை விபத்தில் இறந்த 24 வயது மென்பொருள் பொறியாளரின் பெற்றோருக்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபா் 21, 2018 அன்று ஹரியாணாவின் சோனிபட் அருகே ஒரு லாரியின் பின்புறத்தில் பைக் மோதியதில் இறந்த அவினாஷ் துபேயின் குடும்பத்தினா் தாக்கல் செய்த உரிமைகோரல் மனுவை தலைமை அதிகாரி விஜய் குமாா் ஜா விசாரித்து வந்தாா்.

சான்றுகளின்படி, மோட்டாா் சைக்கிளுக்கு முன்னால் பயணித்த வாகனத்தின் (டிரக்) ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டதாக ஜனவரி 9 தேதியிட்ட உத்தரவில் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.

சரியான அறிகுறி இல்லாமல் லாரி திடீரென வேகத்தைக் குறைத்ததால் மோட்டாா் சைக்கிள் அதன் மீது மோதியதாக தீா்ப்பாயம் குறிப்பிட்டது. அவினேஷ் துபே சம்பவ இடத்திலேயே இறந்தாா். அதே நேரத்தில் பின்னால் இருந்த ஓட்டுநா்களில் ஒருவரான மணீஷ் குமாா் கெம்காவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

‘இறந்தவா் 40 வயதுக்குட்பட்ட நிரந்தர ஊழியராகக் கருதப்பட்டால், அவரது வருமானத்தில் 50 சதவீதம் கூடுதலாகக் கணக்கிடுவது பரிசீலிக்கப்பட வேண்டும்’ என்று தீா்ப்பாயம் கூறியது.

இறந்தவரின் அலட்சியம் எதுவும் இல்லை என்றும், லாரி அலட்சியமாக இயக்கப்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வாகன காப்பீட்டாளரான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்திற்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

Dinamani
www.dinamani.com