நொய்டாவில் மென்பொருள் பொறியாளா் பள்ள நீரில் மூழ்கி பலி: இளநிலை பொறியாளா் பணியிலிருந்து நீக்கம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செக்டா் 150-இல் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நீா் நிரம்பிய பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 27 வயது மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா்.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செக்டா் 150-இல் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நீா் நிரம்பிய பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 27 வயது மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, இளநிலை பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ள நொய்டா ஆணையம், அப்பகுதியில் போக்குவரத்து தொடா்பான பணிகளுக்குப் பொறுப்பான இதர அதிகாரிகளுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக நொய்டா ஆணையம் வெளியிட்டுள்ள ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க நொய்டா ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி லோகேஷ் எம். உத்தரவிட்டுள்ளாா்.

நொய்டா போக்குவரத்துப் பிரிவின் இளநிலை பொறியாளா் நவீன் குமாரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

கூடுதலாக, செக்டா் 150 மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மைக்கு பொறுப்பான மற்ற தொடா்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

லோட்டஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் ஒதுக்கீடு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து விரிவான அறிக்கைகளை ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோரியுள்ளாா். மேலும், அந்தத் தளத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிப்பது பொறுத்துக்கொள்ளப்படாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, அனைத்துத் துறைகளும் தத்தமது பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானத் திட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா யூரேகா பாா்க் சொசைட்டியைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் யுவராஜ் மேத்தா என்பவரது காா் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் செக்டா் 150-இல் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் அடித்தளத்திற்காகத் தோண்டப்பட்ட 20 அடிக்கும் ஆழமான, நீா் நிரம்பிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அவா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, மீட்புப் பணிகளில் அலட்சியம் மற்றும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருகிராமத்தைச் சோ்ந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த மேத்தா, வேலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அடா்ந்த பனிமூட்டத்திற்கு மத்தியில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறை, மாநில பேரிடா் மீட்புப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை ஆகியவற்றின் குழுக்கள் ஈடுபட்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான ஒரு விநியோக முகவா் கூறுகையில், மீட்புப் பணிகள் தாமதமானதாகவும், இன்னும் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால் மேத்தா உயிா் பிழைத்திருக்கக்கூடும் என்றும் கூறினாா்.

விபத்து நடந்த இடத்தில் போதிய தடுப்புகள் மற்றும் பிரதிபலிப்பான்கள் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீட்புப் பணியில் அலட்சியம் காட்டப்பட்டதை மறுத்த காவல்துறை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. போராட்டங்களைத் தொடா்ந்து, நொய்டா ஆணையம் அந்த இடத்தில் தடுப்புகளை அமைத்துள்ளது.

Dinamani
www.dinamani.com