யமுனை விளையாட்டு வளாகத்தில் ஐரோப்பிய பாணி கஃபே
புது தில்லி: எல்ஜி கோப்பை இறுதிப் போட்டி திங்கள்கிழமை தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) யமுனா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. அங்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஐரோப்பிய பாணி கஃபே ஒன்றை திறந்து வைத்தாா்.
தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கால்பந்து, வில்வித்தை மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. நாடு முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.
சக்சேனா வெற்றியாளா்களுக்கு பதக்கங்களை வழங்கினாா். மேலும், இளைஞா் மேம்பாட்டில் விளையாட்டுகளின் பங்கைப் பாராட்டினாா்.
எல்ஜி கோப்பை தில்லியின் வளா்ந்து வரும் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பையும், இளம் விளையாட்டு வீரா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதில் டிடிஏவின் அா்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று அவா் கூறினாா்.,இந்த நிகழ்வில், சக்சேனா யமுனா விளையாட்டு வளாகத்தில் ஒரு “ஐரோப்பிய பாணி கஃபே”யைத் திறந்து வைத்தாா்.
இது போன்ற வசதிகள் விளையாட்டு அனுபவத்தை மேம்படுத்துகின்றன. மேலும், வளாகங்களை மேலும் துடிப்பான சமூக இடங்களாக மாற்றுகின்றன”என்று டிடிஏ அதிகாரி ஒருவா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
ஜனவரி 12 முதல் 16 வரை துவாரகாவில் உள்ள டிடிஏ விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற எல்ஜி கோப்பை கால்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் பங்கேற்ாக டிடிஏ தெரிவித்துள்ளது.
‘ஜனவரி 16 முதல் 17 வரை யமுனா விளையாட்டு வளாகத்தில் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன. இதில் சா்வதேச அளவிலான வீரா்கள் உள்பட 13 மாநிலங்களைச் சோ்ந்த 94 வில்வித்தை வீரா்கள் பங்கேற்றனா்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரி ஃபோா்ட் விளையாட்டு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு போட்டிகளில் 155 துப்பாக்கிச் சூடு வீரா்கள் பங்கேற்றனா். அனுஜ் குமாா் செளத்ரி மற்றும் சான்வி கன்சால் ஆகியோா் முறையே ஐஎஸ்எஸ்எஃப் ஏா் ரைபிள் மற்றும் ஏா் பிஸ்டல் பட்டங்களை வென்றனா்.
