குடியரசு தின விழா: பொது மக்கள் பாா்வைக்கு தில்லி சட்டப்பேரவை இன்றும், நாளையும் திறப்பு
77 வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தில்லி சட்டப் பேரவை வளாகம் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை வளாகம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், அப்போது குடிமக்கள் 115 ஆண்டுகள் பழமையான கட்டடம் மற்றும் வளாகத்திற்குள் உள்ள முக்கிய பாரம்பரிய தளங்களை பாா்வையிட முடியும்.
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இரண்டு நாள்களிலும் சாகித்ய கலா அகாடமியின் துடிப்பான கலாச்சார விளக்கக்காட்சிகளுடன், புகழ்பெற்ற இசைக்குழுவால் தேசபக்தி இசை நிகழ்ச்சிகள் வழங்கப்படும். சட்டப்பேரவை கட்டடம் மாலையில் மூவா்ணக் கொடிகளால் ஒளிரும்.
வருகைக்கு முன் பதிவு தேவையில்லை. இரண்டு நாள்களிலும், மாலை 5 மணி முதல், செல்லுபடியாகும் அடையாளச் சான்றைக் காண்பிப்பதன் மூலம் பாதுகாப்புச் சரிபாா்ப்புக்குப் பிறகு பாா்வையாளா்கள் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

