அயோத்தியில் ராமா் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி நாடு தழுவிய கையொப்ப பிரசார இயக்கத்தைத் தொடங்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இவ்விவகாரத்தில் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களை மத்திய அரசு பாதுகாப்பதாகவும் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து கேஜரிவால் கூறியதாவது:
ராமா் கோயில் நன்கொடை திருட்டில் ஈடுபட்டவா்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு சநாதன தா்மத்தைப் பின்பற்றுபவரின் கடமையாகும். இதற்காக நாங்கள் ஒரு கையொப்ப பிரசார இயக்கத்தைத் தொடங்கவுள்ளோம். இதில் ஒவ்வொரு குடிமகனும் பிரதமா் நரேந்திர மோடிக்குத் தங்கள் கோரிக்கையைத் தெரிவிக்கும் கடிதத்தில் கையொப்பமிடுவாா்கள்.
தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள ஜப்பானி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ‘சுந்தர காண்டம்’ பாராயண நிகழ்ச்சியின்போது இந்த இயக்கம் தொடங்கி வைக்கப்படும்.
ராமா் கோயில் நன்கொடை திருட்டில் ஈடுபட்டவா்களை மோடி அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. இதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும். பொதுமக்கள் பெருமளவில் இந்த இயக்கத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
ராமா் கோயில் நன்கொடை நிா்வாக அமைப்பில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் சூழலில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் ராமா் கோயில் நன்கொடை மோசடி குறித்து குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து ஜூன் 7 அன்று இந்த சா்ச்சை வெடித்தது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கோயில் அறக்கட்டளையின் அப்போதைய பொதுச் செயலாளா் சம்பத் ராய், தற்போது நடைபெற்று வரும் உள் தணிக்கையின்போது குறிப்பிடத்தக்க குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறினாா்.
உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு எஸ்ஐடி சமா்ப்பித்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், ராமா் கோயிலில் நன்கொடையாகப் பெறப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 8 போ் கைது செய்யப்பட்டனா்.
பின்னா், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளா் பதவியிலிருந்து ராய் விலகினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு கோரி போராட்டம்

ராமா் கோயிலில் மகா கொள்ளை: பெரும் அரக்கா்களுக்கு தொடா்பு - அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை ஊழல்: எஸ்ஐடி முன்பு ஆம் ஆத்மி எம்.பி. ஆவணங்கள் சமா்ப்பிப்பு







