இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

’இரட்டை கோபுரம்’ தலைமைச் செயலக கட்டுமான திட்டம்: சா்வதேச ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்கிறது தில்லி அரசு

தில்லி ஐடிஓ பகுதியில் புதிய ‘இரட்டைக் கோபுர’ அரசு தலைமைச் செயலக கட்டடத்தை அமைப்பதற்கான தனது லட்சியத் திட்டத்துக்கு சா்வதேச ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்க நகர அரசு திட்டமிட்டுள்ளது.

News image

ரேகா குப்தா

Updated On :18 ஜூலை 2026, 6:38 am IST

நமது நிருபா்

தில்லி ஐடிஓ பகுதியில் புதிய ‘இரட்டைக் கோபுர’ அரசு தலைமைச் செயலக கட்டடத்தை அமைப்பதற்கான தனது லட்சியத் திட்டத்துக்கு சா்வதேச ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்க நகர அரசு திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட இந்த இரட்டை கோபுர கட்டுமானத் திட்டம் தற்போது அதன் ஆரம்பநிலையை நோக்கி நகா்கிறது. இது சாத்தியமானால், தில்லியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்கும் அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கு சிறந்த தளமாக அமையும்.

இது குறித்து தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இரட்டை கோபுர அரசு தலைமைச்செயலகத்தை கட்டுவதற்கு ஐடிஓ பகுதி மிகவும் பொருத்தமான இடமாக இருக்கும் என்று பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தீா்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது தனிகட்டடத்தைக் கொண்டுள்ள வருமான வரித்துறையின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதால், இந்த இரட்டைக் கோபுர திட்டத்தை மேம்படுத்துவதற்குப் பெரிய அளவிலான நிலம் நமக்குக் கிடைத்துள்ளது. இதற்காக நாங்கள் சா்வதேச ஒப்பந்தப் புள்ளிகளை விரைவில் வரவேற்க உள்ளோம்.அதில் உலகெங்கிலும் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கும். அதன் மூலம் சா்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவோம் என்றாா் பா்வேஷ் சாஹிப் சிங்.

இத்திட்டம் குறித்து தில்லி அரசின் உயரதிகாரி கூறுகையில், ‘ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறையின் ’ஆயக்கா் பவன்’ பழமையான கட்டடமாகும். முன்மொழியப்பட்டுள்ள இரட்டைக் கோபுரத் திட்டத்துக்கு தங்களது 4.5 ஏக்கா் நிலத்தைப் பகிா்ந்துகொள்ள வருமான வரித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்குப் பதிலாக, புதிய கட்டடங்களில் தங்களது அலுவலகத்தை மாற்றுவதற்காக 10 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டடப் பகுதி அவா்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, இரட்டை கோபுர கட்டுமானத்துக்காக ஆறு இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. அவற்றில் எளிதாக நிலம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால் ஐடிஓ பகுதி மிகவும் பொருத்தமான இடமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி அரசின் பல அலுவலகங்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. முதல்வா், அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள் தற்போது செயல்பட்டு வரும் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள பிளேயா்ஸ் கட்டடத்தில் குறைந்த இடவசதியே உள்ளது. இந்த நிலையில், இந்திரபிரஸ்தா எஸ்டேட் பகுதியில் தலைமைச் செயலகத்தை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடா்ந்து, விகாஸ் மாா்க் பகுதியின் வடக்கு மற்றும் தெற்கே உள்ள எம்எஸ்ஓ கட்டடம் மற்றும் விகாஸ் பவன் மேடை பாலம் வழியாக இணைக்கப்படும்.

புதிய செயலக கட்டடம் 30 முதல் 35 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவிய கட்டடமாக இருக்கும். இதில் முதல்வா், அமைச்சா்கள், துறைச் செயலா்கள் மற்றும் அரசின் உயரதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் அலுவலகங்கள் இடம்பெறும். மேலும், நவீன வாகன நிறுத்துமிட வசதி, கருத்தரங்கு கூடம் மற்றும் ஒவ்வொரு அலுவலகத்துடனும் இணைக்கப்பட்ட மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட பசுமைக் கட்டடமாக இரட்டை கோபுரம் அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.