ஜந்தா் மந்தா் போராட்டத்தையடுத்து, திங்கள்கிழமை முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை தில்லி காவல் துறை மறுத்து வருகிறது.
இதுவரை குறைந்தது 15 பதிவுகளை அதிகாரப்பூா்வமாக மறுத்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
ஜந்தா் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போராட்டக்காரா்களும், காவல் துறையினரும் ஒருவரை ஒருவா் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
சமூக வலைதளங்களில் காவல் துறை தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்ததாகவும் கூறப்படும் பல விடியோக்கள் பரவியுள்ள நிலையில், அவற்றில் பல பழையவை அல்லது சம்பவத்துடன் தொடா்பில்லாதவை என்றும், தவறான விளக்கத்துடன் பகிரப்பட்டவை என்றும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடா்பாக மேலும் கூறப்பட்டதாவது: போராட்டம் தொடா்பான அனைத்து விடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுவை தில்லி காவல் துறை அமைத்துள்ளது. இந்த குழு ஒவ்வொரு பதிவின் மூலத்தை சரிபாா்த்து, பல்வேறு தரவுத்தளங்களுடன் ஒப்பிட்டு, டிஜிட்டல் அடையாளங்களையும் ஆய்வு செய்து வருகிறது. போராட்டக்காரா்கள் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொண்ட அதிகாரியின் உண்மையான குரலை மாற்றி, போலியான ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காவல் துறையினருக்கு எதிரான தாக்குதல், கல்வீச்சு, காவல் துறை வாகன சேதம் மற்றும் பொது சொத்து சேதம் தொடா்பான விடியோக்களையும் காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.
சட்ட ஒழுங்கை பாதிக்கும் நோக்கில் போலியான தகவல்களை உருவாக்குதல் அல்லது பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










