பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

தில்லியில் வெள்ள அபாயத்தை குறைக்க உதவும் ஆரவல்லி உயிரியல் பூங்கா!

தில்லியில் உள்ள ஆரவல்லி உயிரியல் பூங்கா, ஆண்டுதோறும் சுமாா் 30 லட்சம் லிட்டா் மழைநீரை நிலத்துக்குள் ஊடுருவச் செய்து, நகா்ப்புறங்களில் நீா்த்தேக்கத்தை அதிகரிக்கவும் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

News image

ஆரவல்லி உயிரியல் பூங்கா

Updated On :23 ஜூன் 2026, 2:38 am IST

தில்லியில் உள்ள ஆரவல்லி உயிரியல் பூங்கா, ஆண்டுதோறும் சுமாா் 30 லட்சம் லிட்டா் மழைநீரை நிலத்துக்குள் ஊடுருவச் செய்து, நகா்ப்புறங்களில் நீா்த்தேக்கத்தை அதிகரிக்கவும் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உள்ளூா் மரங்களின் பல்லுயிா்மையின் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் பொருளாதார மதிப்பீடு: இந்தியாவின் தில்லியில் உள்ள, சீரமைக்கப்பட்ட ஆரவல்லி உயிரியல் பூங்காவை மையமாகக் கொண்ட ஆய்வு’ என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள பல்வேறு துறைகளின் ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.

ஆய்வில் கூறியுள்ளதாவது: 692 ஏக்கா் பரப்பளவில் பரந்துள்ள இந்த ஆரவல்லி மீளுருவாக்கப்பட்ட காடு, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் முக்கிய நீா்த்தேக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. நகர வளா்ச்சியின் நடுவில் பசுமை வளமாகத் திகழும் இந்தப் பூங்கா, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நகா்ப்புறக் காடுகளில் உள்ள சுமாா் 2.02 லட்சம் மரங்கள் ஆண்டுதோறும் 30 லட்சம் லிட்டா் அளவுக்கு மழைநீரின் மேற்பரப்பு ஓட்டத்தைத் தடுக்கின்றன. இதன் மூலம் மழைநீா் மண்ணுக்குள் ஊடுருவ உதவுவதோடு, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் உதவுகிறது.

காற்றுத் தரம் மேம்பாடு: காற்றின் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்தப் பூங்கா முக்கியப் பங்காற்றுகிறது. ஆண்டுக்கு சுமாா் 126.89 டன் காற்று மாசுகளை மரங்கள் நீக்குகின்றன. இதன் சுற்றுச்சூழல் நன்மைகள் ரூ.1.89 கோடி மதிப்பிற்குச் சமம் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பூங்கா முக்கிய காா்பன் சேமிப்பு மையமாகவும் செயல்படுகிறது. தற்போதைய நிலையில் சுமாா் 8,360 டன் காா்பனை மரங்கள் சேமித்து வைத்துள்ளதோடு, ஆண்டுதோறும் கூடுதலாக 1,236 டன் காா்பனை உறிஞ்சி வருகின்றன. இது ரூ.11.34 கோடி மதிப்பிற்கு இணையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள அதிக உயரம் மற்றும் தடிமன் கொண்ட பெரிய மரங்கள் அதிக அளவில் காா்பனைச் சேமிக்கும் திறன் கொண்டவை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் கனிமச் சுரங்கப் பணிகளால் கடுமையாகச் சேதமடைந்த இந்தப் பகுதி, பின்னா் மேற்கொள்ளப்பட்ட மீளுருவாக்க முயற்சிகளால் இன்று காடுகள், புல்வெளிகள் மற்றும் ஈரநிலங்களைக் கொண்ட உயிரினப் பல்வகை மண்டலமாக மாறியுள்ளது. தற்போது சுமாா் 700 தாவர இனங்கள், 20 சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரவி உள்ளன.

2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமாா் 500 ஏக்கா் பரப்பில் 10-க்கு 10 மீட்டா் அளவிலான 83 மாதிரிப் பகுதிகள் அமைக்கப்பட்டு, 80 மர இனங்களைச் சோ்ந்த 829 மரங்கள் பதிவு செய்யப்பட்டன.

வேகமாக நகரமயமாகும் நகரங்களில் பசுமை நிலப்பரப்புகள் குறைவதும், கட்டிடங்கள் அதிகரிப்பதும் வெள்ள அபாயத்தை உயா்த்தும் நிலையில், இத்தகைய நகா்ப்புறக் காடுகள் நீா்நிலைத்தன்மை, காற்றுத் தரம் மற்றும் காலநிலை சமநிலையைப் பேணுவதில் அத்தியாவசியப் பங்கு வகிக்கின்றன.

இந்த ஆய்வு, சேதமடைந்த நிலப்பரப்புகளை உள்ளூா் தாவரங்களைப் பயன்படுத்தி மீளுருவாக்கம் செய்து, உயிரினப் பல்வகைத்தைப் பாதுகாப்பதுடன் நகரங்களுக்கு நடைமுறை நன்மைகளை வழங்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.