மின்விநியோக நிறுவனங்களான பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா பவா் ஆகியவற்றின் கணக்குகளை தலைமைக் கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) மூலம் ஆய்வு செய்ய முன்மொழியும் தில்லி அரசின் நடவடிக்கையில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான விடுமுறை அமா்வு, இந்த மின்விநியோக நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருதி தள்ளுபடி செய்தது. கடந்த ஜூன் 6-ஆம் தேதி தில்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில் எந்தவித பாதகமான முடிவுகளும் இடம்பெறவில்லை என்றும், விளக்கமளிக்கும் வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டாா்.
மேலும், சிஏஜி சட்டத்தின் பிரிவு 20(3)-இன்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மனுதாரா்களுக்கு முழுமையான விசாரணை வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகே உரிய அதிகாரியால் தீா்மானிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லி அரசின் இந்த முன்மொழிவை சட்டவிரோதமானது மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்புகளுக்கு முரணானது என்று வாதிட்ட நிறுவனத்தினா், இத்தகைய கணக்காய்வைத் தடுக்கின்ற உச்சநீதிமன்ற தீா்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தனா்.
ஆனால், அரசின் அந்த அறிவிப்பு நிறுவனங்களுக்கு பாதகமானதாக கருத முடியாது என்றும், கணக்காய்வு ஒப்படைக்கும் முன் விசாரணை வாய்ப்பு வழங்குவது சட்டரீதியான நடைமுறையின் பகுதியாகும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
உச்சநீதிமன்ற தீா்ப்புகள் இந்த நிறுவனங்களின் கணக்காய்வைத் தடைசெய்யவில்லை என்றும், சிஏஜி சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் அது செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
நிறுவனங்களின் உண்மையான நிதிநிலையை உறுதிப்படுத்தவும், தொடா்புடைய தரப்புகளுக்கிடையிலான பரிவா்த்தனைகள் அல்லது நிதி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை பரிசோதிக்கவும் சுயாதீன கணக்காய்வு அவசியம் எனவும் அரசு வலியுறுத்தியது.
இந்தத் தீா்ப்பு, மின்விநியோக நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் நிா்வாக நடைமுறைகள் குறித்து மேலதிக ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் நிலையில், தில்லி மின்சாரத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லி மின்துறை அமைச்சா் வரவேற்பு
மின்விநியோக தணிக்கை விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றத்தின் முடிவை மின்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் வரவேற்றுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: மின்விநியோக நிறுவனங்களின் கணக்குகளை சிஏஜி தணிக்கை செய்வதை எதிா்த்து உயா் நீதிமன்றத்தை நாடியதே, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் மின்விநியோக நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை தில்லி மக்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அந்த நிறுவனங்களிடம் நிலுவையில் உள்ள ரூ. 38,500 கோடி மதிப்பிலான ஒழுங்குமுறைச் சொத்துகள் விவகாரத்தை தொடா்ந்து, அவற்றின் கணக்குகளை சிஏஜி தணிக்கை செய்வதற்கான முன்மொழிவை அரசு கொண்டு வந்தது.
தணிக்கை தொடா்பான விவகாரத்தை இப்போது தில்லி துணைநிலை ஆளுநா் விசாரிக்க முடியும். மின்சாரக் கட்டண உயா்வு வடிவில் தில்லி மக்கள் மீது ஒரு ரூபாய் சுமை கூட சுமத்தப்படாது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அரசு இறுதிவரை போராடும் என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலி செய்யும் நோட்டீஸுக்கு எதிராக பிரபல ஹோட்டல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு

தனியாா் பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கான ஆன்லைன் சோ்க்கை தொடக்கம்: ஜூன் 30 வரை விண்ணப்பிக்க தில்லி அரசு அனுமதி

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை - முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

பிரதமா் இல்லம் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




