சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பிரதமா் இல்லம் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மாா்க் அருகே உள்ள பாய் ராம் கேம்ப், டிஐடி கேம்ப் மற்றும் மஸ்ஜித் கேம்ப் ஆகிய மூன்று குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களை வெளியேற்றும் விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image

தில்லி உயா்நீதிமன்றம்

Updated On :12 மே 2026, 12:43 am IST

பிரதமரின் அதிகாரப்பூா்வ இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மாா்க் அருகே உள்ள பாய் ராம் கேம்ப், டிஐடி கேம்ப் மற்றும் மஸ்ஜித் கேம்ப் ஆகிய மூன்று குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களை வெளியேற்றும் விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் திங்களன்று மறுத்துவிட்டது.

நீதிபதி புருஷைந்திர குமாா் கௌரவ், மனுதாரா்களான குடியிருப்பாளா்களுக்கு நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தால் அக்டோபா் 2025ல் முதலில் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டதையும், அதற்குப் பிறகு போதுமான கால அவகாசம் கடந்துவிட்டதையும் குறிப்பிட்டு, 15 நாட்களுக்குள் முகாம்களைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்த குடிசைப் பகுதிகள், செயல்பாட்டில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு மிக அருகில், ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் அமைந்துள்ளன என்றும், பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் பிற முக்கிய பொது மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் அப்பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் மத்திய அரசு வாதிட்டது. அருகாமையில் மாற்று குடியிருப்பு வசதி இல்லாததால், தற்போது அதே இடத்தில் மறுவாழ்வு அளிப்பது சாத்தியமில்லை என்றும், அதற்குப் பதிலாக மூன்று குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 717 பேரை சவ்தா கேவ்ராவுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது என்றும் அரசு கூறியது.

சமகால புவிசாா் அரசியல் நிகழ்வுகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளே மனுதாரா்களை வெளியேற்றுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் என்றும், இதுபோன்ற நிா்வாகக் கொள்கை முடிவுகளில் தலையிட நீதிமன்றம் அதிக ஆா்வம் காட்டக்கூடாது என்றும் தீா்ப்பில் நீதிமன்றம் தெரிவித்தது.

மனுதாரா்கள் மீதான பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், மாற்று குடியிருப்பில் அவா்களுக்குக் கல்வி, பயணம், நீா் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை அதிகாரிகள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

எனவே, தங்களின் மாற்று ஒதுக்கீட்டை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மனுதாரா்கள், ஆவணங்களை முறையாகச் சரிபாா்த்து, உடனடியாகத் தங்களின் ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பெற்று, சாவ்தா கேவ்ராவில் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மாற்று குடியிருப்பு தற்போதைய முகாம்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், அது தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பாதிப்பதாகவும் மனுதாரா்கள் வாதிட்டனா்.

தீா்ப்பில், கேள்விக்குரிய நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது என்றும், இந்திய ராணுவமும் இந்திய விமானப்படையும் தற்போது அந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.